Air Quality: மோசமடையும் காற்றின் தரம்! - 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..
மாநில அரசுகள் காற்று மாசை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் மற்றும் பிற வட மாநிலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வந்த நிலையில் தற்போது மிக மோசமான நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 மாநில அரசுகள் காற்று மாசை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, ஒரு வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 7 ஆம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
#WATCH | Overall Air Quality Index (AQI) in Delhi stands at 322, in the 'Very Poor' category as per SAFAR-India.
— ANI (@ANI) October 30, 2023
(Visuals from Dhaula Kuan and Arjun Path) pic.twitter.com/UWTlO2xbZ0
காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் "காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்", 301 முதல் 400 இருந்தால் "காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்", மற்றும் 401 முதல் 500 இருந்தால் "காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" கருதப்படுகிறது.
காற்று மாசு காரணமாக மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் பிகே மிஸ்ரா ஆகியோர் தேசிய தலைநகரில் பயிர்களை எரிப்பதால் தான் காற்று மாசடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக, டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் (CAQM) உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என்பதால், காற்றின் தர மேலாண்மை ஆணையம் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (ஜிஆர்ஏபி) 2 ஆம் கட்டத்தை விதிப்பதாக அறிவித்தது. GRAP என்பது காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகளின் தொகுப்பாகும். மக்கள் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அதிகாரிகள் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தவும், CNG/எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களின் சேவையை அதிகரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.