Pregnancy Termination : கணவரின் இறப்பு.. கடும் மன அழுத்தம்.. கருவை கலைக்க பெண்ணுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
கைம்பெண்கள், விவாகரத்து செய்த பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்கள், மைனர்கள் ஆகியோர் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
பெண்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்டிய நீதிமன்றம்:
கருக்கலைப்பு விவகாரத்தில் முடிவு எடுக்கும் உரிமை பெண்களுக்கே இருப்பதாக உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. குறிப்பாக, திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு அளித்தது. பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக இம்மாதிரியான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கருக்கலைப்பு விவகாரத்தில் பெண்களின் உரிமையை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். 29 வாரகால கருவை கலைக்க கைம்பெண் ஒருவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கணவனின் இறப்பை தொடர்ந்து, கடும் மன வேதனைக்கு உள்ளானதாகவும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றி வருவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
மருத்துவ கருக்கலைப்பு திருத்த சட்டம் சொல்வது என்ன?
எனவே, கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மருத்துவ கருகலைப்பு திருத்த சட்டம், 2021இன்படி, பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் அனுமதியோடு 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சில பெண்களிக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கைம்பெண்கள், விவாகரத்து செய்த பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்கள், மைனர்கள் ஆகியோர் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. 24 வாரங்கள் கடந்திருந்த போதிலும், பெண்ணின் நிலையை கருத்தில் கொண்டு, 29 வார கருவை கலைக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (எய்ம்ஸ்) உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.
கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டிய உயர் நீதிமன்றம், "இனப்பெருக்கத்துக்கான உரிமையில், குழந்தையை பெற்று கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என தேர்வு செய்யும் உரிமையும் அடங்கும்" என தெரிவித்தது.
இதேபோன்ற விவகாரம் ஒன்றில் கருக்கலைப்பு செய்து கொள்ள கொள்ள மும்பை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி மறுத்தது பெரும் விவாத பொருளானது. மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை வழங்கிய தீர்ப்பு, அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது. கருக்கலைப்பு செய்து கொள்ள பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு அனுமதி மறுத்திருந்தது மும்பை உயர் நீதிமன்றம்.
குழந்தை உயிருடன் பிறப்பதற்கும், உடல் நல குறைபாடு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதை காரணம் காட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. மீதமுள்ள 12 வாரங்களுக்கும் கர்ப்பத்தை கலைக்காமல் அரசு காப்பகத்தில் குழந்தையை பெற்றெடுக்க நீதிமன்றம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Watch Shocking Video: நடுவானில் காற்றில் அடித்து செல்லப்பட்ட விமானத்தின் கதவு.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்