Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: கனமழையுடன் பலத்த காற்று வீசியதில் டெல்லி விமான நிலைய முனையம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
Delhi Airport Roof Collapse: டெல்லி விமான நிலைய முனையம் சரிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு, 20 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய முனையம் சரிந்து விழுந்து ஒருவர் பலி:
டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று விமான நிலையத்தின் துணை ஆணையர் (டிசிபி) உஷா ரங்னானி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், டெல்லி போலீஸ், என்.டி.ஆர்.எஃப் மற்றும் சி.ஐ.எஸ்.எஃப் குழுவினர் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசுகையில், “காலை 5 மணியளவில், உள்நாட்டு விமான நிலைய முனையம் 1-க்கு வெளியே, புறப்படும் கேட் எண். 1 முதல் கேட் எண். 2 வரை பரவியிருந்த மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் சுமார் 4 வாகனங்கள் சேதமடைந்தன” என உஷா ரங்னானி கூறினார்.
விமான சேவை பாதிப்பு:
மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தால் டெல்லி விமான நிலைய சேவைகள் சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. முனையம் ஒன்றின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள டெர்மினல்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. டிஜிசிஏ அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மாற்று விமானங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுமாறும் அல்லது விதிமுறைகளின் கீழ் முழுப் பணத்தைத் திரும்ப வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Compensation of Rs 20 lakh for the deceased and Rs 3 lakh for the injured has been announced, says Union Minister of Civil Aviation Ram Mohan Naidu Kinjarapu https://t.co/WLthE4xuYt pic.twitter.com/nEWz2aTbBW
— ANI (@ANI) June 28, 2024
இழப்பீடு அறிவித்த மத்திய அமைச்சர்:
முனையம் சரிந்து விழுந்ததை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பேசியவர், ”கனமழை காரணமாக விமான நிலையத்திற்கு வெளியே உள்ள நிழற்குடையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த, காயம் அடைந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அவர்களை சரியான முறையில் கவனித்து வருகிறோம். இப்போது நாங்கள் அவசரகால மீட்புக் குழுவையும், CISF, NDRF குழுக்களையும் அனுப்பியுள்ளோம். மேலும் வேறு எந்த உயிரிழப்பும் ஏற்படாதவாறு முழுமையாக ஆய்வு செய்துள்ளோம். டெர்மினல் கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகள் மூடப்பட்டுவிட்டன. இங்கு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களுக்கு 20 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 3 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்” என ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
மோடி திறந்து வைத்த முனையத்தில் விபத்து:
மார்ச் 10 அன்று, பிரதமர் மோடி நாடு முழுவதும் 9,800 கோடி ரூபாய் மதிப்பிலான 15 விமான நிலையத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களில், தற்போது விபத்துக்குள்ளான, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட முனையம் -1 திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை குறிப்பிட்டு, லோக்சபா தேர்தலுக்கான பரபுரை மேற்கொள்வதற்காக, முழுமையடையாத முனையத்தை பிரதமர் மோடி அவசரகதியில் திறந்து வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.