15 வருஷ பழைய வண்டி வச்சிருக்கீங்களா? இனி, உங்களுக்கு பெட்ரோல் கிடையாது!
மாடுபாட்டின் காரணமாக டெல்லி பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், 15 வருட பழைய வாகனங்களுக்கு பங்கில் பெட்ரோல் போடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரான டெல்லியில் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது டெல்லி பாஜக அரசு. 15 வருட பழைய வாகனங்களுக்கு பங்கில் பெட்ரோல் போடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாடுபாட்டின் காரணமாக டெல்லி பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாசுவை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் டெல்லி அரசு இறங்கியுள்ளது.
வாழத் தகுதியற்றதாக மாறியதா டெல்லி?
இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே, டெல்லி மாசுவை குறைக்க அங்கு ஆட்சியில் உள்ள அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசு, அதிரடி முடிவை ஒன்றை எடுத்திருக்கிறது. டெல்லியில் 15 வருட பழைய வாகனங்களுக்கு பங்கில் பெட்ரோல் போடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய ரூல்ஸ் போட்ட பாஜக:
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, "15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை அடையாளம் காணும் கேஜெட்களை பெட்ரோல் பங்கில் வைத்துள்ளோம். அவற்றுக்கு எரிபொருள் வழங்கப்படாது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசாங்கத்தின் முதல் கவனம் டெல்லிக்குள் நுழையும் கனரக வாகனங்கள் மீது இருக்கும். வகுக்கப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை குழுக்கள் சரிபார்க்கும். டெல்லியில் மாசுபாட்டை ஏற்படுத்தும் பல பெரிய நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு புதிய மாசு எதிர்ப்பு "கேஜெட்களை" நிறுவ அறிவுறுத்தப்படும்" என்றார்.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் ஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களும் சாலைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு முதல், இம்மாதிரியான பழைய வாகனங்கள் சாலைகளில் செல்வது கண்டறியப்பட்டால், அத்தகைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.





















