Cyclone Michaung: நொடி பொழுதில் காரின் மீது சரிந்த கட்டிடம்; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்; பதைபதைக்க வைக்கும் வீடியோ
Cyclone Michaung: மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்து ஆந்திராவில் தனது கோரதாண்டவத்தினை நடத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலின் தாக்கம் கூட்டு சித்தூர் மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருப்பதி நகர் சென்னரெட்டி காலனியில் திங்கள்கிழமை இரவு அதாவது டிசம்பர் 4ஆம் தேதி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதே நேரத்தில் கட்டிடத்தின் முன் நின்றுகொண்டு இருந்த இருவர் காயமடைந்தனர். கார்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததால் காரும் சேதமடைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரெட் அலார்ட்
ஆந்திராவில் உள்ள பாபட்லா, பிரகாசம், பல்நாடு, குண்டூர், கிருஷ்ணா, என்டிஆர், பிஏ, ஏலூர், கோனசீமா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலில் கோரதாண்டவத்தால் ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டத்தில் 25.1 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. யாடமாரி, கார்வேடிநகரம், புலிச்சேர்லா, பலமனேரு, ஸ்ரீகாளஹஸ்தி, நாகலாபுரம், சத்தியவேடு, திருப்பதி போன்ற பகுதிகளில் வேளாண் பயிர்களின் சேதம் என்பது அதிகப்படியாக ஏற்பட்டுள்ளது என வேளாண் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
சித்தூர், குடிபாலா, பலமனேரு, பெனுமுரு போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் நேரத்திற்கு நேரம் அதிகமாகி உள்ளது. பெனுமுரு மண்டல் மற்றும் கல்வகுண்ட்லா என்டிஆர் நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளது. மல்லேமடுகு ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தால், திருமலை ஐனா பாபவினாசனம், ஆகாசகங்கா, குமால்தாரா, குமாரதாரா, கோகர்பம் ஆகிய ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் முற்றிலும் நிரம்பின. சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெள்ள நீர் வருவதால் பாபவினாசனம் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் நேற்று இரவு ஒரு கதவணை மட்டும் அதிகாரிகள் திறந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. காட் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.