Cylonic Storms: தீவிர புயலாக மாறிய ஹமூன் புயல்.. கரையை கடக்கும் தேஜ் புயல்.. மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..
வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் இன்று அதிகாலை தீவிர புயலாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 19 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு தேஜ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest observations indicate Very Severe Cyclonic Storm (VSCS) TEJ crossed Yemen coast near 15.9 N/52.15E close to south of Al Ghaidah during 0230 & 0330 IST of 24 Oct as a VSCS with maximum sustained wind speed reaching 125-135 kmph gusting to 150 kmph. pic.twitter.com/GPOv408dEP
— India Meteorological Department (@Indiametdept) October 24, 2023
இன்று அதிகாலை நிலவரப்படி ஏமன் (யேமன்) நாட்டின் அல் கைதாவின் தெற்கு - தென்கிழக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் மேற்கு- தென்மேற்கில் இருந்து 230 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் 8 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது புயல் கரையை கடந்து வருவதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் இந்த அதி தீவிர தேஜ் புயல் முழுமையாக கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclonic Storm “Hamoon” intensified into a Severe cyclonic storm over Northwest Bay of Bengal pic.twitter.com/XssAJX3e8p
— India Meteorological Department (@Indiametdept) October 24, 2023
அரபிக் கடலில் உருவான புயல் கரையை கடந்து வரும் நிலையில் வங்கக் கடலில் ஹமூன் புயல் வலுப்பெற்றுள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது புயலாக மாறிய நிலையில் இந்த புயலுக்கு ஹமூன் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஹமூன் புயல் இன்று அதிகாலை தீவிர புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரம் வடக்கு – வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் நோக்கி நகரக்கூடும். தற்போது பாரதீப்பில் இருந்து 210 கிமீ தொலைவில் (ஒடிஷா), திகாவில் இருந்து (மேற்கு வங்கம்) தென்மேற்கே 270 கிமீ தொலைவிலும், கேப்புப்பாராவில் (வங்கதேசம்) 350 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது நாளை வங்கதேசத்தில் கேப்புப்பாரா மற்றும் சிட்டகோங்க் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகள்:
24.10.2023 முதல் 25.10.2023 வரை: சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள்:
24.10.2023 வரை: சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் மாலையில் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை பகுதிகள்:
24.10.2023 முதல் 25.10.2023 வரை: காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள்:
24.10.2023: சூறாவளி காற்று மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் பகலில் படிப்படியாக குறைந்து மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலையில் படிப்படியாக குறைந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ் கடல் மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.