Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இஸ்ரேலின் அயர்ன்டோமை போன்று இந்தியாவின் வான் பரப்பை பாதுகாக்க, சுதர்ஷன் சக்ரா திட்டம் தயாராவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன்டோம் ஆக சுதர்ஷன் சக்ரா திட்டம் எப்படி செயல்படும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்தியாவின் அயர்ன் டோம் திட்டம்:
சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி, கிருஷ்ணரின் சக்தி வாய்ந்த ஆயுதமாக கருதப்படும் சுதர்ஷன் சக்ரா பெயரில் புதிய வான் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2035ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் இந்த திட்டம் வான் பாதுகாப்பு அம்சமாகவும், துல்லியமான எதிர் தாக்குதல் நடத்தும் திறன்களையும் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் அயர்ன் டோமை போன்று சுதர்ஷன் சக்ரா திட்டம் இந்தியாவின் வான் பரப்பை பாதுகாக்கும் என துறை சார் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்,
சுதர்ஷன் சக்ரா திட்டம் என்றால் என்ன?
திட்டம் குறித்து செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, “சுதர்ஷன் சக்ரா திட்டம் சக்தி வாய்ந்த ஆயுத அமைப்பை கொண்டிருக்கும். இது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதோடு மட்டுமின்றி, அவர்களின் மீது ம் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும். பாதுகாப்பு கவசம் விரிவடைந்து கொண்டே இருக்கும். இதனால் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பாக உணர முடியும். இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், நமது தொழில்நுட்பம் உயர்ந்ததாகவும், மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்கும். முற்றிலும் நவீனமான இந்த அமைப்பு உள்நாட்டிலேயே தயார்படுத்தப்படும். இஸ்ரேலின் அயர்ன் டோமைப் போலவே அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களில் இருந்தும் சுதர்ஷன் சக்ரா திட்டம் நாட்டை பாதுகாக்கும். நாட்டின் மீது ஒரு பாதுகாப்பு கேடயமாக செயல்படும்” என தெரிவித்தார்.
சுதர்ஷன் சக்ரா திட்டம் எப்படி செயல்படும்?
இந்தியாவின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு வலையமைப்பை ஒரு அதிநவீன ஏவுகணை தாக்குதல் படையுடன் இணைப்பதே சுதர்ஷன் சக்ரா திட்டத்தின் மையமாகும். அதன்படி, ஒருங்கிணைக்கப்பட்ட ஏர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் நெட்வர்க்கை (IACCS), ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை கட்டமைப்புடன் சேர்த்து பயன்படுத்துவதே திட்டத்தின் இலக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலவையானது அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து துல்லியமான தாக்குதல்களை வழங்குவதற்கான ஒரு தடையற்ற வலையமைப்பை உருவாக்கும். அதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளும் பாதுகாக்கப்படும் என கூறப்படுகிறது.
வான் பாதுகாப்பின் உச்சபட்சம்:
IACCS என்பது ஒரு முழுமையான தானியங்கி, நிகழ்நேர வான் பாதுகாப்பு கட்டளை அமைப்பாகும், இது பல்வேறு சென்சார்கள், ரேடார்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை ஒருங்கிணைத்து விரிவான வான் சூழ்நிலை தொடர்பான தகவல்களை வழங்குகிறது. இது வான், நிலம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை செயல்படுத்துகிறது மற்றும் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு விரைவான பதிலடி தருவதையும் உறுதி செய்கிறது. IACCS ஆனது ஃபைபர் ஆப்டிக் அடிப்படையிலான தொலைதொடர்பு கட்டமைப்பு கொண்டு சென்சார்கள், போர் விமானங்கள், ஆகாஷ், பராக்-8, MR-SAM மற்றும் S-400 போன்ற ஏவுகணை அமைப்புகளுக்கு உடனடி தகவல்களை வழங்குகின்றன.
இதனால் எதிரி விமானங்கள், ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைக் கண்காணிக்கவும், பொருத்தமான எதிர் நடவடிக்கைகளை விரைவாகப் பயன்படுத்தவும் படைகளுக்கு உதவுகிறது. சமீபத்திய அப்டேட்களில் அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதிலும் ஆயுதப் பணிகளை மேம்படுத்துவதிலும் உதவுவதற்காக AI திறன்கள் சேர்க்கப்பட்டன. இது இந்த அமைப்பை இந்தியாவின் வான் பாதுகாப்பு நவீனமயமாக்கலின் உச்சபட்சமாக மாற்றியுள்ளது.






















