CSDS Lokniti Survey: தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய பிரச்னைகள்.. கலக்கத்தில் பாஜக.. ஷாக் தரும் சர்வே!
வேலையின்மையும் விலைவாசி உயர்வும் தேர்தலின் முக்கிய பிரச்னைகள் என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகள், இந்தியாவை ஆளுப்போவது என்பதை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
ஷாக் தரும் சர்வே முடிவுகள்:
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற தீவிரமாக வேலை செய்து வருகிறது.
குறிப்பாக, ஏழை மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு முதல் இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்குவது வரை பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், அதிர்ச்சி தரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தலில் எதிரொலிக்க உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து கருத்துக்கணிப்பு வாயிலாக தெரிய வந்துள்ளது.
தேர்தலில் எதிரொலிக்க உள்ள முக்கிய பிரச்னைகள்:
சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி எடுத்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்படி, வேலையில்லா திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் மக்களின் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்டோர் வேலையின்மையும் விலைவாசி உயர்வும் முக்கிய பிரச்னைகள் என கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலை கிடைப்பது கடினமாகிவிட்டதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 62 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 65 சதவிகித நகரவாசிகளும் 62 சதவிகித கிராமவாசிகளும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். 67 சதவிகித இஸ்லாமியர்களும் 63 சதவிகித இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பட்டியலினத்தவரும் வேலை கிடைப்பது கடினமாகிவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, வேலை கிடைப்பது எளிதாகிவிட்டதாக 17 சதவிகித உயர் சாதியினர் கருத்து தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்ந்துவிட்டதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 71 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். குறிப்பாக, 76 சதவிகித ஏழை மக்கள், இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து பெரும்பகுதி மக்கள் கவலை தெரிவித்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. குறைந்து வரும் வேலைவாய்ப்புகளுக்கு மத்திய, மாநில அரசே காரணம் என 57 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில், தங்களின் வாழ்க்கை தரம் மோசம் அடைந்துவிட்டதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 35 சதவிகிதத்தினர் தெரிவித்துள்னர். முன்பைவிட, கடந்த 5 ஆண்டுகளில், தங்களின் வாழ்க்கை தரம் சிறப்பாக இருப்பதாக 48 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: Bengaluru Metro: சட்டையில் பட்டன் போடாததால் மெட்ரோ ரயிலில் அனுமதி மறுப்பு.. பெங்களூருவில் மீண்டும் சர்ச்சை!