Covishield Vaccine Price: மாநில அரசுகளுக்கு ரூபாய் 400-க்கு கோவிஷீல்ட்.. இருமடங்காக விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்..
Covishield Vaccine Price:மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி 400 ரூபாய் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை டோஸ் ஒன்றுக்கு, மாநில அரசுகளுக்கு 400 ரூபாயாகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தி அறிவித்துள்ளது. வரும் மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை மத்திய அரசு அறிவித்துது. இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்கோவிட்-19 தடுப்பு மருந்து பெற தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு அறிவித்தது.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும், இதர 50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்கவேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட முன்னுரிமை பிரிவினருக்கு தொடர்ந்து இலவச தடுப்பூசி வழங்கப்படும் ( ஜனவரி 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 30 கோடி பேருக்கு) என்றும் மத்திய அரசு அறிவித்தது.
தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எந்த பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கவும் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையை அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி 400 ரூபாய் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 600 செலுத்த வேண்டும்.
மத்திய அரசு கொள்முதல்:
ஒரு டோஸ் தடுப்பூசி 150 ரூபாய் என்ற விலையில், சீரம் நிறுவனம் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசியையும் பாரத் பயோடெக் நிறுவனம் 90 மில்லியன் டோஸ் தடுப்பூசியையும் ஜுலை மாதத்திற்குள் உற்பத்திசெய்து வழங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்காக, பாரத் பயோ டெக் மற்றும் சீரம் நிறுவனத்திற்கு முன்தொகையாக 4 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மேலும், உலகளாவிய கொரோனா தடுப்பூசி விலைகளை கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது, இந்தியாவில் மலிவான விலையில் தடுப்பூசிகள் கிடைப்பதை எங்கள் நிறுவனம் உறுதி செய்துள்ளதாக சீரம் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பாரத் பயோ டெக் நிறுவனம் ஆண்டிற்கு 700 மில்லியன் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை ஹைதரபாத் மற்றும் பெங்களுரில் ஏற்படுத்தியுள்ளது.
எத்தனை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன? இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிவரை, 19,01,413 முகாம்களில் 13,01,19,310 பயனாளிகளுக்கு, கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 29 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி இயக்கம்:
அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்தது. கோவிஷீல்டு தடுப்பூசியை கட்டுப்பாட்டுடன் கூடிய அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த ஜனவரி மாதம் அனுமதித்தது. அதேபோன்று, பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது. இதற்கும், அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி, கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, சுமார் 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது . இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இதர உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை மத்திய அரசு அறிவித்துது. இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவிட்-19 தடுப்பு மருந்து பெற தகுதியுடையவர் என்று மத்திய அரசு அறிவித்தது.