Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ. பன்னீர்செல்வத்தை கொசு என விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.

சமீப காலமாக, அதிமுகவின் இரு பிரிவினரிடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது. ஓபிஎஸ் பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில், ஓ. பன்னீர்செல்வத்தை தற்போது ஜெயக்குமார் விமர்சித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்
சென்னையில், ஓபிஎஸ் இல்லத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ஒரு காலத்தில் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அதிமுக-வை, தற்போது இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டதாக விமர்சித்தார். அதோடு, அதிமுகவை வெற்றி பெற வைக்கக்கூடிய ரகசியம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொசுக்களை பற்றி பேசாதீர்கள் என கிண்டலடித்த ஜெயக்குமார்
சென்னையில் இன்று(18.02.25) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஓபிஎஸ்-ன் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள் என்று கூறி சிரித்த ஜெயக்குமார், நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளபோது, கொசுக்களை பற்றி பேச இதுவா நேரம் என கேட்டு ஓ. பன்னீர்செல்வத்தை கிண்டலடித்தார்.
"திமுகவுடன் ஓ. பன்னீர்செல்வம் ‘ரகசிய‘ கூட்டு"
அதிமுகவின் வெற்றிக்கு ரகசியம் வைத்திருப்பதாக ஓபிஎஸ் சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அவர் ரகசியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதிலிருந்தே, அவர் யாருடன் ரகசிய தொடர்பு வைத்துள்ளார் என்பது தெரிகிறதா எனவும், நீட் ரகசியம் யாருடையது, உதயநிதி, அதனால், திமுக உடன் அவர் ரகசிய உறவு வைத்ததால், அந்த நோய் இவருக்கும் தெற்றி விட்டது என ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்தார். மேலும், அது என்ன தங்கமலை ரகசியமா அல்லது சிதம்பர ரகசியமா..? என்ன ரகசியம் என்பதை சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே என கூறினார். அதோடு, ரகசியம் என்று கூறி 4 ஆண்டுகளாக ஏமாற்றிவரும் ஓபிஎஸ்-ன் பேச்சு, இனி தொண்டர்களிடையே எடுபடாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

