”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
திமுகவிற்கு செல்லவிருக்கும் இரட்டை இலை எம்.எல்.ஏவும், விஜய் கட்சியில் சேர பேச்சு நடத்தி வரும் முன்னாள் அமைச்சரும் மூவேந்தர்களின் 3வது மன்னராக விளங்கும் பரம்பரையின் பெயரை தாங்கியவர்கள் என கூறப்படுகிறது

இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தென்மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் திமுகவிற்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டு வாசலில் தவம் ; மாற்றுக் கட்சிக்கு தூது
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை முன்கூட்டியே அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், எம்.எல்.ஏ சீட் பெற பலரும் இப்போதே முட்டி மோத தொடங்கியுள்ளனர். யாரை பிடித்தால் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டு வாசலில் ஒரு பக்கம் தவம் கிடக்க ஒரு தரப்பினர் தொடங்கியுள்ள நிலையில், தங்களுக்கு அதிமுகவில் சீட் இனி கிடைக்காது என்பதையறிந்த சிலர் திமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல டீல் பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் வேஸ்டு ; அதிமுக வேலைக்கு ஆகாது – முடிவெடுத்த எம்.எல்.ஏ ?
இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தென் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் இதுநாள் வரை ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நின்று வருகிறார். ஆனால், இனியும் பன்னீர்செல்வத்தை நம்பினால் நட்டாறு உறுதி என்பதை உணர்ந்த அவர் அதிமுக அல்லாத மாற்றுக் கட்சிக்கு செல்ல முடிவெடுத்து அதற்கான காய்நகர்த்தல்களை கடந்த சில நாட்களாக தீவிரமாக செய்து வருகிறார். அவருடைய தற்போதைய சாய்ஸ்சாக ஆளுங்கட்சியான திமுகவே இருக்கிறது.
ஏற்கனவே, திமுக தலைமைக்கு தூது அனுப்பியுள்ள அந்த தென்மாவட்ட எம்.எல்.ஏ, தான் கட்சியில் இணைந்த பிறகு தற்போது தான் எம்.எல்.ஏவாக இருக்கும் தொகுதியில் திமுக சார்பில் நிற்க மட்டும் அனுமதி அளித்தால் போதும் என்று கூறி கோரிக்கையையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மூவேந்தர்களில் மூன்றாவதாக சொல்லப்படும் மன்னர் பரம்பரையின் பெயரை 2வதாக கொண்ட அந்த எம்.எல்.ஏவிற்கு விரைவில் க்ரீன் சிக்னல் திமுக தலைமையில் இருந்து வரும் என்ற வாக்குறுதியை அவர் நம்பி பேசிய திமுக நிர்வாகி தரப்பு கூறியுள்ளதால் ஏக குஷியில் இருக்கிறாராம்.
பாஜக – அதிமுக – ஒபிஎஸ் – ஈபிஎஸ்
அதே மாதிரி, பாஜகவில் இருந்து வந்து அதிமுகவில் இணைந்து, கல்வித் துறைக்கு அமைச்சராக இருந்த ஒரு முன்னாள் அமைச்சரும், மெத்த படித்த மேதாவியாக அறியப்படுபவருமான அதே மூவேந்தரில் மூன்றாவது மன்னர் வகையறாவின் பெயரை தாங்கிய நிர்வாகி, தனக்கு இனி அதிமுகவில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து, தன்னுடைய பாதையை மாற்றி பனையூருக்கு காரை விட ரெடியாகி வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தன்னைப் போன்ற அறிவாளிகளையும் ஏற்கனவே ஆட்சியில் பங்காற்றியவர்களையும் விஜய் தன்னுடன் வைத்துக்கொண்டால், அது அவருக்கு பலம்தான் என்ற ரீதியில் த.வெ.க முக்கிய நிர்வாகியிடம் தன் பலத்தை பற்றி சிலாகித்து பேசியதோடு, தனக்கு ப்ரோமோஷன் செய்யும் பணிகளையும் செய்ய முடிவெடித்துவிட்டாராம் அந்த மூவேந்தர்களின் மூன்றாம் மன்னர் வகையாறா பெயர் கொண்ட நிர்வாகி. விரைவில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதி என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. இனி கட்சி மாறுவது, தாவுவது, குதிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது என எல்லாமே நடக்கத் தொடங்கும்.

