Sonia Gandhi: ராமர் கோயில் திறப்பு விழா.. காங்கிரஸ் எடுத்த நிலைபாடு.. சோனியா காந்தி அதிர்ச்சி முடிவு
ராமர் கோயில் திறப்பு விழா அரசியல் ரீதியாக முக்கியத்துவமான விவகாரம் என்பதால் INDIA கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுடன் இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் திறப்பு விழா:
கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில், சோனியா காந்தி கலந்து கொள்வாரா? என்பது குறித்து கட்சி சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால், திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அல்லது கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்திருந்தார்.
சோனியா காந்தி அதிர்ச்சி முடிவு:
இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அரசியல் ரீதியாக முக்கியத்துவமான விவகாரம் என்பதால் INDIA கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுடன் இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதை முன்வைத்து பாஜக அரசியல் செய்யும் என்றும் மக்களவை தேர்தலுக்கு முன்பு அது கட்சிக்கு பின்னடைவாக போய்விடும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் முடிவை சோனியா காந்தி எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.