(Source: ECI/ABP News/ABP Majha)
Bharat Nyay Yatra: பரபரக்கும் அரசியல் களம்.. இன்று முதல் மீண்டும் யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி..!
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த ஓராண்டாகவே ஒவ்வொரு கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
ராகுல் காந்தி இன்று முதல் தன்னுடைய “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” நிகழ்ச்சியை தொடங்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த ஓராண்டாகவே ஒவ்வொரு கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பாதயாத்திரையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.,யுமான ராகுல்காந்தி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது “பாரத ஒற்றுமை யாத்திரை” நிகழ்ச்சியை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வாயிலாக சுமார் 4000 கி.மீ தூரம் நடந்த ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த யாத்திரையானது 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் காஷ்மீரில் தனது பயணத்தை நிறைவு செய்தார். அதாவது ராகுல் காந்தியின் இந்த பயணம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இருந்தது.
ராகுல்காந்தி யாத்திரை
இந்நிலையில் அடுத்தக்கட்டமாக ஓராண்டு இடைவெளிக்குப் பின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ராகுல் காந்தி தனது அடுத்தக்கட்ட பயணத்தை தொடங்க உள்ளார். இன்று தொடங்கும் இந்த யாத்திரை கடந்த பல மாதங்களாக பிரச்சினைகளால் பற்றி எரியும் மணிப்பூரில் இருந்து தொடங்க உள்ளது. அங்குள்ள இம்பால் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில் தொடங்கும் இந்த நியாய யாத்திரையில் பல்வேறு நிபந்தனைகளுடன் மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த யாத்திரையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடங்கி வைக்கிறார்.
இந்த யாத்திரையானது 15 மாநிலங்கள் வழியாக நடைபெறுகிறது. இது 110 மாவட்டங்கள், 100 மக்களைவை தொகுதிகள், 337 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்தம் 6,173 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த யாத்திரை சில இடங்களில் நடைப்பயணமாகவும், பேருந்துகள் மூலமாகவும் நடைபயணம் மேற்கொள்கிறார். இன்று மணிப்பூரில் யாத்திரை நிறைவு செய்யும் ராகுல்காந்தி அங்கிருந்து நாகாலாந்து செல்கிறார். தொடர்ந்து அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேலாலயா, மேற்கு வங்கம்,பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் வழியாக சென்று மகாராஷ்ட்ராவில் மார்ச் 20 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில் ராகுல்காந்தியின் யாத்திரையில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த யாத்திரை மேடையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.