Tamilnadu MPs - Amit Shah: 27-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு நிவாரணம்.. அமித்ஷா அளித்த வாக்குறுதி.. திமுக எம்பி டி.ஆர். பாலு பேட்டி
Tamilnadu Mps - Amit Shah: தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்க கோரிக்கை வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துள்ளனர்.

Tamilnadu Mps - Amit Shah: வெள்ள நிவாரண நிதியாக கோரிய 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துள்ளனர்.
கொட்டி தீர்த்த கனமழை:
கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. வரலாறு காணாத அளவில் கொட்டிய கனமழையால் வடமாவட்டங்களில் வெள்ளத்தில் தத்தளித்தன. மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீள தொடங்கின.
இந்த பிரச்னை முழுமையாக முடிவுக்கு வரும் முன்பே, தென்மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவில் பேய்மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் நிவாரணப் பொருட்களுடன், உதவித்தொகையாக ஆறாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையும், ஆய்வும்:
வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்புகளுக்கான இடைக்கால நிவாரணம் மற்றும் நிரந்தர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, மாநில அரசின் குழு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மாநில அரசு மேற்கொண்ண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு தவிர்கப்பட்டுள்ளதாகவும் பாராட்டினர். இதைதொடர்ந்து, டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்த்த்து தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு, நிவாரண நிதியாக 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார்.
ஆனால், தம்ழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்துறை அமைச்சரை சந்தித்த தமிழக எம்.பிக்கள்:
மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் நேரம் கேட்டிருந்தனர்.
அதன்படி இன்று நடைபெறுள்ள சந்திப்பில் மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தி உள்ளனர்.
"27ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு நிவாரணம்"
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு, "மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாடு வெள்ள பாதிப்பு தொடர்பாக விரிவான அறிக்கை வழங்கப்பட்டது. உடனடியாக நிதியியை அளிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கடிதத்தை உள்துறை அமைச்சரிடம் அளித்தோம்
மூன்று மத்தியக் குழுக்கள் தமிழ்நாட்டில் ஆய்வு செய்துள்ளது. மத்திய குழு 21 ஆம் தேதி அளவில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என அமித் ஷா தெரிவித்தார். அறிக்கை வழங்கிய பின்னர் உள்துறை, வேளாண் துறை, நிதித்துறை ஆகிய துறைகளை சார் அதிகாரிகள் அறிக்கையை ஆய்வு செய்து எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்வர் அந்த பிறகு நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.
மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கவில்லை. மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். என அமித் ஷா தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு நிதியை விடுவிப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். சந்திப்பு மிக நிறைவாக இருந்தது. 27ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

