அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறாரா? பரபரப்பை கிளப்பிய திக்விஜய் சிங்!
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அல்லது கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்ப்பை கிளப்பிய அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா:
கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில், சோனியா காந்தி கலந்து கொள்வாரா? என்பது குறித்து கட்சி சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அல்லது கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இதில் என்ன ஆட்சேபனை இருக்க முடியும்? இந்த விஷயத்தில் சோனியா காந்தி மிகவும் சாதகமாக இருக்கிறார். ஒன்று அவர் செல்வார் அல்லது கட்சியிலிருந்து பிரிதிநிதிகள் செல்வார்கள்" என்றார்.
பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர்:
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்ல தங்களுக்கு அழைப்பு வந்ததா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திக்விஜய சிங், "உண்மையான பக்தர்களை அழைக்காததால் அவர்கள் (பாஜக) என்னையும் அழைக்க மாட்டார்கள். முரளி மனோகர் ஜோஷிக்கோ, லால் கிருஷ்ணா அத்வானிக்கோ, திக்விஜய் சிங்குக்கோ அழைப்பிதழ் வழங்கப்படாது" என்றார்.
அரசியல் கட்சி தலைவர்கள், சமய தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.