Congress Candidates List: வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி.. திருவனந்தபுரத்தில் சசி தரூர்.. காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!
காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில், தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:
அந்த வகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். திருவனந்தபுரத்தில் சசி தரூர் மீண்டும் களமிறங்குகிறார். அதேபோல, சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கான் தொகுதியில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் போட்டியிடுகிறார்.
ஸ்டார் வேட்பாளர்கள் யார்? யார்?
9 மாநிலங்களில் 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆலப்புழா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளர் கே. சி. வேணுகோபாலும் பெங்களூரு புறநகர் தொகுதியில் கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமாரின் சகோதரர் டி.கே. சுரேஷூம் போட்டியிடுகின்றனர்.
கேரளாவில் 16 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் 7 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் 6 தொகுதிகளுக்கும் தெலங்கானாவில் 4 தொகுதிகளுக்கும் மேகாலயாவில் 2 தொகுதிகளுக்கும் திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி, லட்சத்தீவு, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
In the first list of candidates for the 2024 Lok Sabha elections, Congress CEC has selected 39 names.
— Congress (@INCIndia) March 8, 2024
• 15 candidates are from the General category
• 24 candidates are from SC, ST, OBC and minority groups
• 12 candidates are below 50 years of age
• 8 candidates are in the… pic.twitter.com/YbH1dVuaLb
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 15 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள். பட்டியலின, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் 24 பேர். 50 வயதுக்கும் குறைவானவர்கள் 12 பேர். வயநாடு தொகுதியை பொறுத்தவரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அன்னி ராஜா களமிறங்குகிறார். இவர் வேறு யாரும் அல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜாவின் மனைவியே ஆவர்.
அதேபோல, திருவனந்தபுரத்தை பொறுத்தவரையில், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியே வெற்றுபெற்று வருகிறது.