தலாய் லாமாவை உளவு பார்த்தாரா சீன பெண்..? சிக்கிய மர்ம நபர்...நடந்தது என்ன?
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீனப் பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.
திபெத் பகுதி சீனாவின் ஒரு அங்கமா அல்லது சுதந்திரமான பகுதியா என்ற விவகாரத்தால் சீனாவுக்கும் நாடு கடந்த திபெத் அரசாங்கத்திற்கும் பிரச்னை நிலவி வருகிறது.
வரலாற்றில், திபெத் எப்போதும் சீனாவின் பகுதியாக இருந்ததில்லை என நாடு கடந்த திபெத் அரசு கூறி வருகிறது. ஆனால், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே திபெத் உள்ளதாக சீன அரசு தெரிவித்து வருகிறது.
இதனால், சிபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கும் சீன அரசுக்கும் தொடர் பிரச்னை நிலவி வருகிறது. எனவே, அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீனப் பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
பிகாரில் உள்ள கயா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தலாய் லாமா திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, அவரின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து உள்ளூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
சாங் சியாலான் என அடையாளம் காணப்பட்டவர் சீன உளவாளியாக இருப்பாரோ என சந்தேகம் எழுந்தது. அவரின் ஓவியங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அவரைப் பற்றிய தகவல்களை வழங்குமாறு உள்ளூர் மக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
கிடைக்கப்பட்ட தகவலின்படி, சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒரு வருடத்திற்கும் மேலாக கயா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும், சீனப் பெண் தங்கியிருப்பது குறித்து வெளிநாட்டுப் பிரிவில் எந்தப் பதிவும் இல்லை.
#WATCH via ANI Facebook | Dalai Lama visit: Suspicion of Chinese spy in Gaya, security tightenedhttps://t.co/DySP756Vvl
— ANI (@ANI) December 29, 2022
கயாவுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தலாய் லாமா செல்வது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக அவரின் சுற்று பயணம் ரத்து செய்யப்பட்டது. மகாபோதி கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 'கால் சக்ரா' மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலாய் லாமா உரையாற்றினார். டிசம்பர் 31 வரை மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் அவர் உரை வழங்க உள்ளார்.
ஏற்கனவே, தலாய் லாமா விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரிய பிரச்னை நிலவி வருகிறது. அதுமட்டும் இன்றி, எல்லை பிரச்னை காரணமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பதற்றம் நிலவி வருகிறது.