சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
எந்த அளவுக்கு சோசியல் மீடியா அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிப்போனதோ அதே அளவு தேவையில்லாத தீமைகளையும் கொண்டு சேர்க்க தவறுவதில்லை.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் மூலம் விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க முடியும்.
உணவு, உடை, உறைவிடம் என்ற அத்தியாவசிய தேவைகளில் தற்போது செல்போனும் சோசியல் மீடியாவும் வாலண்டியராக உள்ளே புகுந்துள்ளது. தற்போதைய காலகட்டமே ஆன்லைனை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. ஒரு மனிதன், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், திரெட் உள்ளிட்ட சமூக ஊடங்களில் இல்லை என்றால் அவனை வித்தியாசமாக பார்க்கும் உலகமாக மாறிவிட்டது. அவன் ஏதோ புதிய உலகத்தில் இருந்து வந்தவன் போன்று சித்தரிப்பார்கள்.
எந்த அளவுக்கு சோசியல் மீடியா அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிப்போனதோ அதே அளவு தேவையில்லாத தீமைகளையும் கொண்டு சேர்க்க தவறுவதில்லை. இதனால் சிறுவர்கள் எளிமையாக தீய பழக்கவழக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள் என்றால் அதுவும் மிகையல்ல.
இந்நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் புது சட்டம் வகுக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெற்று சட்டமாக மாற வாய்ப்புள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளைங்களை பயன்படுத்தாதவாறு சமூக ஊடகங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். AFP இன் அறிக்கையின்படி, இதை செய்யத்தவறும் நிறுவனங்களுக்கு ரூ. 250 கோடி வரை அபராதம் விதிக்க முடியும் என இந்த சட்டம் சொல்லுகிறது.
புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தின் கீழ் அறையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, வியாழன் மாலை செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. இப்போது அது சட்டமாக மாற வாய்ப்புள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ், புதிய நடவடிக்கைகளுக்கு வலுவாக ஒப்புதல் அளித்துள்ளதுடன், இந்த முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு ஆஸ்திரேலிய பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சமூக ஊடகங்கள் மோசடி செய்பவர்களுக்கும், மோசமான ஆன்லைன் விளையாட்டிற்கும் கருவியாக செயல்படுகிறது. சிறுவர்கள் செல்போனை அணைத்துவைத்துவிட்டு, நீச்சல் குளத்திலும், கால்பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் மைதானத்திலும், டென்னிஸ் மற்றும் நெட்பால் மைதானத்திலும் நேரத்தை செலவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 12 வயது சிறுவன் கூறுகையில், “நான் சோசியல் மீடியாவை தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறேன். அது இல்லாதது வித்தியாசமாக இருக்கும். மேலும் என் வீட்டிலும் நண்பர்களுடனும் பேச முடியும். பலர் அதைச் சுற்றி பல்வேறு வழிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். "நான் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன், என் மற்ற நண்பர்கள் அனைவரும் அப்படித்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், 11 வயதான எல்சி ஆர்கின்ஸ்டால் சமூக ஊடகங்களுக்கு இன்னும் ஒரு இடம் இருப்பதாகக் கூறினார். குறிப்பாக பேக்கிங் அல்லது கலை பற்றிய பயிற்சிகளைப் பார்க்க விரும்பும் குழந்தைகளுக்கு, அவற்றில் பல சமூக ஊடகங்கள் மூலம் தெரியவரும் என்றார்.