`குதிரைகளுடன் நுழைந்த சீன ராணுவத்தினர்!’ -உத்தராகாண்ட் மாநில எல்லையில் பதற்றம்!
சீனாவின் ராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உத்தராகாண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி பகுதியில் இந்திய எல்லையைக் கடந்து நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் ராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உத்தராகாண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி பகுதியில் இந்திய எல்லையைக் கடந்து நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன ராணுவத்தினர் இந்தியாவின் பாலம் உள்பட பல பொதுச் சொத்துகளைச் சேதம் செய்துவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. கிழக்கு லடாக் பகுதியில் சீனப் படைகள் பின்வாங்கியதன் பிறகு, இப்படியான சீனப் படையெடுப்பு குறித்த தகவல்கள் டெல்லி வட்டாரங்களில் எச்சரிக்கையை ஒலித்துள்ளன.
1954ஆம் ஆண்டு, முதன்முதலாக பாராஹோட்டி எல்லையின் வழியாக நுழைந்த சீன ராணுவம் பல்வேறு இடங்களைக் கைப்பற்றியதோடு, 1962ஆம் ஆண்டு இந்திய சீனப் போரில் இந்த எல்லையின் பங்கு முக்கியமானது. அதன்பிறகு, பெரிதாக பேசப்படாத பாராஹோட்டி எல்லை தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30 அன்று, லடாக் பகுதியின் டுன் ஜுன் லா கணவாய் வழியாக சுமார் 100 சீன ராணுவத்தினர், 55 குதிரைகளுடன் இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 5 கிலோமீட்டர் வரை நுழைந்தனர். எனினும் இவர்களை எதிர்கொள்வதற்கு முன்பே, திரும்பிச் சென்றதால் இந்த விவகாரம் மௌனமாக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, சீன ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி வருகிறது என்ற போதும், கடந்த ஜூலை மாதம் கிழக்கு லடாக்கின் பாதுகாப்பு குறித்து டெல்லியில் கலந்துரையாடல் நடத்தும் அளவுக்கு சீன ராணுவத்தினரின் அத்துமீறல் இருந்தது. குதிரைகளில் சீன ராணுவத்தினர் டுன் ஜுன் லா கணவாயைக் கடந்து பாராஹோட்டியில் மேய்ச்சலில் ஈடுபட்டதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீன ராணுவம் இந்திய நிலப்பரப்பிற்குள் சுமார் 3 மணி நேரங்கள் சுற்றியதாகக் கூறப்படுகிறது. பாராஹோட்டி பகுதி இந்திய ராணுவத்தினர் அதிகம் இல்லாத பகுதி என்பதால், சீன ராணுவத்தினரின் அத்துமீறல் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. சீன ராணுவத்தினர் நுழைந்தது குறித்து அப்பகுதி மக்கள் ராணுவத்தினருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ராணுவம் ரோந்து மேற்கொண்டு, உறுதிசெய்வதற்காக வாகனங்களை அனுப்பியதாகவும், வாகனங்கள் பாராஹோட்டியைச் சென்றடைவதற்குள் சீன ராணுவம் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
நந்ததேவி தேசியப் பூங்காவின் வடக்குப் பகுதியில் இருக்கிறது பாராஹோட்டி உச்சிமலை. இது இந்திய ராணுவம் முகாம் கொண்டிருக்கும் ஜோஷிமத் பகுதியோடு இணைக்கும் இடமாக இருக்கிறது. இங்கு இந்தியா சீனா எல்லையில், உத்தராகாண்ட் மாநிலத்தில் சுமார் 350 கிலோமீட்டர் எல்லையில் இந்திய ராணுவமும், இந்தோ திபெத் எல்லைக் காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையைத் தீர்மானிப்பதில் இருக்கும் முரண்பாடுகளின் காரணமாக சீன ராணுவத்தின் அத்துமீறல் நிகழ்ந்து வருவதாக இந்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. சீன ராணுவத்தினரின் எல்லையோர அத்துமீறல் காரணமாக கிழக்கு லடாக், உத்தராகாண்ட் ஆகிய எல்லைப் பகுதிகளில் மேலும் இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.