TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிப்பது தொடர்பான மசோதாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
TN Assembly: உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிப்பது தொடர்பான மசோதாவை, அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தனி அலுவலர்கள் நியமன மசோதா:
அதன்படி, 27 மாவட்ட ஊரக ஊராட்சி அமைப்புகளை நிர்வாகிக்க தனி அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மாவட்ட ஊராட்சிகளை ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குனர்களும், ஊராட்சி ஒன்றியங்களை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களும் நிர்வகிக்க உள்ளனர். 27 மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த 5ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், தனி அதிகாரிகளை நியமனம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுளது.
அரசு மசோதாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு:
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிப்பது தொடர்பான மசோதாவிற்கு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு, திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று பாமக மற்றும் பாஜகவினரும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொகுதி வரையறை மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்து, உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் எப்போது?
வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவிகளுக்கான காலவரையறை முடிய உள்ள நிலையில், தமிழக அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எஸ்.சி. மற்றும் எஸ்.டி,. மகளிருக்கான வார்டுகளை முடிவு செய்த பிறகே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற வழக்கு கடந்த மாதம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”வார்ட் வரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் உள்ளிட்ட பணிகள் முடியும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகாது என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதன் காரணமாக தான், தேர்தல் நடத்தும் வரை, உள்ளாட்சி நிர்வாகங்களை கவனிக்க தனி அலுவலர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமா?
ஏறக்குறைய 92 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், திட்டமிடப்பட்ட தேர்தல் பணிகள் ஏதும் முழுமையாக நிறைவேறவில்லை. அதேநேரம், அதேநேரம், 2019ஆம் ஆண்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இடைவெளி விட்டு நடத்தப்பட்டது. இதனால் ஊரக மற்றும் நகர்ப்புற என இரு பகுதிகளாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காத்திருந்து உள்ளாட்சி தேர்தலை அனைத்து மாவட்டங்களிலும் ஒரே கட்டமாக நடத்தவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.