ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை அளிக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பெண்களுக்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற விதிகளைத் திருத்தம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
என்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை?
இதன்படி, ''பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும், பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் தண்டனை சிறை அளிக்கப்படும்'' என்று சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு மரண தண்டனை?
அதேபோல ’’ஒரு நபர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை அளிக்கப்படும். ஆசிட் வீசினால் குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை அளிக்கப்படும். ஒரு நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், 3 முதல் 5 ஆண்டுகள் சிறை கிடைக்கும்.
கூட்டு பாலியல் வன்கொடுமை, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து ஆகிய செயல்களில் ஈடுபட்டால் மரணிக்கும் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.
காவல் அதிகாரி அல்லது அவரின் உறவினரால் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் 20 ஆண்டுகளுக்குக் குறையாத சிறை தண்டனை அளிக்கப்படும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கப்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பே முதன்மை
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சட்டபேரவையில் 2025 குற்றவியல் சட்டத் திருத்தத்தை தாக்கல் செய்தார். பின்பு அவர் பேசும்போது, ’’தமிழ்நாட்டில் அதிக அளவிலான பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதுகிறோம். ஆதம்பாக்கம் சத்யா கொலை வழக்கில், விரைவிலேயே குற்றவாளிக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, தயவு தாட்சண்யம் இன்றி தண்டனை வாங்கிக் கொடுப்போம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்’’ என்று தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கட்ட நிகழ்வு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.