Chandrayaan 3: விக்ரம் லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடக்கம்.. சந்திரயான் 3ல் அடுத்த கட்டம்..!
நிலவில் கால்தடம் பதித்துள்ள விக்ரம் லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விக்ரம் லேண்டரை நிலவில் இன்று மாலை தரையில் இறக்கியது. இது இந்திய மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தரையிறங்கும் ரோவர்:
இந்த நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக பிரக்யா ரோவரை தரையிறக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும் இந்த பிரக்யா ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பிரக்யா ரோவரின் வேகம் அதன் செயல்பாட்டை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக செல்லும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சுமார் 2 மணி நேரத்தில் பிரக்யா ரோவர் தனது பணியை தொடங்கும் என்று ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்தது. இதன்படி, தற்போது பிரக்யா ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து தனது பணியை தொடங்கியுள்ளது. இதற்காக விக்ரம் லேண்டரில் சாய்வு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு:
இந்த சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்படுகிறது. 6 சக்கரம் கொண்ட இந்த ரோவரில் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 14 நாட்களில் நிலவில் கண்டுபிடிக்கப்படும் முக்கிய அம்சங்களை லேண்டர் படம்பிடித்து இஸ்ரோவிற்கு அனுப்பப்பட உள்ளது. உலகிலே நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த மகத்தான சாதனையை படைத்த இந்தியாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.