மூளையில் வீக்கம்.. கடும் காய்ச்சல்.. 2 மாதங்களில் 28 குழந்தைகளின் உயிரை பறித்த மர்ம வைரஸ்!
குஜராத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களில் 28 குழந்தைகள் உயிரிழந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பல்வேறு உயிர் கொல்லி வைரஸ் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ், உலகையே கட்டிப்போட்டது. தற்போது, மங்கி பாக்ஸ் வைரஸ் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
குஜராத்தை அச்சுறுத்தும் சண்டிபுரா வைரஸ்:
இந்த நிலையில், குஜராத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களில் 28 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. கடந்த ஜூலை மாதம், முதல்முறையாக சண்டிபுரா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டார். குஜராத் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர் உமேஷ் மக்வானா, இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல், "குஜராத்தில் வைரஸ் என்செபாலிடிஸ் காரணமாக இதுவரை 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, சண்டிபுரா வைரஸ் உட்பட சில நோய்க்கிருமிகளால் ஏற்படுகிறது. 101 குழந்தைகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 164 பேரில் 61 பேர் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், கடுமையான மூளையழற்சி (மூளை வீக்கம்) போன்றவை சண்டிபுரா வைரஸின் அறிகுறிகள் ஆகும். கொசுக்கள், உண்ணிகள் மற்றும் மணல் ஈக்கள் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவுகிறது.
2 மாதங்களில் 28 குழந்தைகள் மரணம்:
சண்டிபுரா வைரஸை பரப்பும் மணல் ஈ, மண் வீடுகளின் விரிசல்களில் வாழ்கின்றன. இதுவரை, 14 வயதுக்குட்பட்ட 101 குழந்தைகள் கடுமையான மூளைக்காய்ச்சலால் இறந்துள்ளன. இவர்களில், 28 பேர் சண்டிபுரா வைரஸ் தொற்று காரணமாக இறந்துள்ளனர். 73 பேர் பிற வைரஸ் தொற்றுகளால் ஏற்பட்ட மூளைக்காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சிகிச்சைக்குப் பிறகு 63 குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டன. நான்கு பேர் இன்னும் மருத்துவ கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் யாரும் இந்த வைரசால் பாதிக்கப்படவில்லை,
கடந்த 12 நாட்களாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சண்டிபுரா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மாநிலம் முழுவதும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், வைரஸ் மூளைக்காய்ச்சல் மற்றும் சண்டிபுரா வழக்குகள் பதிவான பகுதிகளில் 53,000 வீடுகளில் சுகாதாரக் குழுக்கள் ஆய்வு செய்தனர்.
நோய் தடுப்புக்காக கிராமங்களில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மண் வீடுகளில் மாலத்தியான் பவுடர் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.58 லட்சம் வீடுகளில் திரவ பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது" என்றார்.