(Source: ECI/ABP News/ABP Majha)
Chamoli Accident: திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்...பாலத்தில் மின்சாரம் தாக்கி 25 பேர் உயிரிழப்பு...உத்தரகாண்டில் சோகம்!
உத்திரகாண்ட் மாநிலத்தில் சாமேலியில் டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து சிதறிய விபத்தில் பொதுமக்கள் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Chamoli Accident: உத்திரகாண்ட் மாநிலத்தில் சாமேலியில் டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து சிதறிய விபத்தில் பொதுமக்கள் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள பாலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் ஒரு போலீஸ் அதிகாரி, ஊர்க்காவல் படையினர் மூவர் உள்பட 25 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 7 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம், அந்த மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பாதிக்கப்பட்டவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
சாமோலி சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரிடம் பேசியுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்" என குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நடந்துள்ள பாலம் அலக்நந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நமாமி கங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் எய்ம்ஸ் மருத்துவமனையிலும், ஐந்து பேர் சாமோலியில் உள்ள கோபேஷ்வர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. ஒரு வாட்ச்மேன் மின்சாரம் தாக்கி இறந்ததாக கிராமத்தில் இருந்து போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ஆய்வுக்காக கிராம மக்களுடன் காவல் துறையினர் சென்றபோது, பலர் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநிலத்தின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் கூறுகையில், "ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 ஊர்க்காவல் படையினர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். விசாரணை நடந்து வருகிறது. பாலத்தின் தடுப்பு சுவற்றில் மின்சாரம் பாய்ந்ததாகமுதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். அந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் டேராடூனில் இருந்து சாமோலிக்கு சென்றுள்ளார். அவருடன் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட்டும் சென்றுள்ளார்.
இதுகுறித்து புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். போலீசார், மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்கள், அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷிற்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
.