பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு விமான கட்டணத்தை நாளை இரவுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது இண்டிகோ. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமான சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது. மற்ற விமான நிறுவனங்களை காட்டிலும் இண்டிகோ விமானத்தில் கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் பெரும்பாலும் இண்டிகோ விமானத்தை முதன்மையாக தேர்வு செய்கின்றனர்.
இண்டிகோவிற்கு கெடு:
ஆனால், கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இண்டிகோ விமானத்தின் சேவை மிக மோசமாக முடங்கியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதி அமலானது காரணமாகவே இண்டிகோ விமான சேவை முடங்கியதாக கூறப்படுகிறது. விமானிகளுக்கான ஓய்வு நேர அதிகரிப்பு, கட்டாயம் 2 நாள் விடுப்பு போன்ற காரணங்களால் இண்டிகோ நிறுவனம் ஸ்தம்பித்தாக கூறப்படுகிறது.
இண்டிகோ விமானம் ரத்தானதால் சென்னை, டெல்லி, மும்பை உள்பட நாட்டின் பல விமான நிலையங்களிலும் பயணிகள் கொந்தளித்தனர். இந்த சூழலில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் கிஞ்ஜரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்ததால் தனது விமானத்தில் பதிவு செய்த பயணிகளின் விமான கட்டணத்தை வரும் டிசம்பர் 7ம் தேதி( நாளை) இரவு 8 மணிக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பொருட்களை ஒப்படைக்கவும் உத்தரவு:
மேலும், பயணிகளின் பொருட்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவர்களது முகவரியில் ஒப்படைக்கப்படுவதையும் இண்டிகோ நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் மட்டும் நாடு முழுவதும் இண்டிகோ 1232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபரில் 84.1 சதவீதமாக இருந்த இண்டிகோ விமானங்களின் சேவை கடந்த நவம்பரில் 67.70 ஆக குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் 1ம் தேதி 49.5 விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் இயங்கியுள்ளது. டிசம்பர் 2ம் தேதி 35 சதவீதம் மட்டுமே இண்டிகோ விமானங்கள் மட்டுமே இயங்கியுள்ளது.
புதிய கட்டண வரம்பு:
மத்திய அரசின் புதிய விதிகள் அமலானது முதலே தங்களுக்கு அதிகளவு நெருக்கடி எழுந்துள்ளதாக இண்டிகோ தரப்பு கூறுகிறது. இண்டிகோவிற்கு இது மிகப்பெரிய அளவில் களங்கத்தை உண்டாக்கியுள்ளது. இதனால், இண்டிகோவில் வரும் நாட்களில் பயணிக்க பயணிகள் தயக்கம் காட்டுவார்கள் என்றே கருதப்படுகிறது.
இந்த சூழலில், விமான நிறுவனங்களுக்கு கட்டண வரம்பை மத்திய அரசு நியமித்துள்ளது. அதாவது, 500 கிலோ மீட்டர் வரை 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். 500 முதல் 1000 கிலோ மீட்டர் வரை 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். 1000 முதல் 1500 கிலோ மீட்டர் வரை ரூபாய் 15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், 1500 கிலோ மீட்டருக்கு மேல் ரூபாய் 18 ஆயிரம் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டணம் வரிகள் எதுவும் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது.





















