Land For Jobs Scam: லாலுவின் குடும்பத்தை நெருங்கும் சிபிஐ...விஸ்வரூபம் எடுக்கும் வேலை மோசடி வழக்கு
1 லட்சத்துக்கும் அதிகமான சதுர அடி நிலத்தை ரயில்வேயில் பணியில் சேர்வதற்காக லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிலர் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடந்ததாகக் கூறப்படும் பணி மோசடி வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பு இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர்களான ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவி, தற்போது பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ள அவரது மகன், மற்றும் அவர்களது இரு மகள்கள், ரயில்வேயில் வேலை பெற்ற 12 பேர் மீது மே 18 அன்று இந்த சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அவர்களில் பெரும்பாலானோர் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் தங்களுக்கு சொந்தமான 1 லட்சத்துக்கும் அதிகமான சதுர அடி நிலத்தை ரயில்வேயில் பணியில் சேர்வதற்காக லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிலர் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த சிபிஐ வழக்கு மற்றும் லாலு குடும்பத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் மத்திய பாஜக அரசின் சதி செயல் என ராஷ்டிரிய ஜனதா தள விமர்சித்துள்ளது. சமீபத்தில்தான், பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விலகியது. இதையடுத்து, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து, முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றார். துணை முதலமைச்சரானார் லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி.
லாலு பிரசாத்தின் உதவியாளர் போலா யாதவை சிபிஐ கைது செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்களால் லாலுவின் "ஹனுமான்" என்றும் "நிழல்" என்று அன்புடன் அன்புடன் அழைக்கப்படுபவர் போலா யாதவ்.
2005 மற்றும் 2009 க்கு இடையில் அப்போதைய ரயில்வேத்துறை அமைச்சருக்கு சிறப்புப் பணி அலுவலராக போலா யாதவ் செயலப்பட்டார்.
குரூப் டி பதவிகளுக்கு விண்ணப்பித்த மூன்றே நாள்களில் வேலை தேடி அலைந்தோரை ரயில்வே துறை அலுவலர்கள் மாற்றாக நியமித்தனர். வேலை தேடியவர்களில் தனிநபர்கள் சிலரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் லாலுவின் குடும்பத்திற்கு நிலத்தை மாற்றிய பிறகு அவர்களுக்கு வழக்கமான பணி வேலைகள் வழங்கப்பட்டன என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ராப்ரி தேவி மற்றும் அவர்களது மகள்கள் மிசா பார்தி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரின் பெயரில் பத்திரப்பதிவு மூலம் நிலங்கள் மாற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.