விளையாட்டுத்துறையில் பாகுபாடா? ஏகலைவனின் விரலை கேட்ட துரோணாச்சாரியார் - கனிமொழி எம்.பி பேசியது என்ன?
ஏகலைவன் காலத்தில் இருந்து இன்று வரை விளையாட்டுத் துறையில் சாதிய பாகுபாடு நிலவுவதாக, மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி வேதனையுடன் பேசியுள்ளார்.
மக்களவையில் விளையாட்டுத் துறை மேம்பாடு பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, விளையாட்டு என்பது நமது பாடத் திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டுமல்ல, கட்டாயமாக்கப்பட வேண்டும். பல்வேறு பள்ளிகளிலும் குறிப்பாக பல தனியார் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் என்பதே இல்லாத நிலை நிலவுகிறது.
”ஒற்றுமையாக இருங்கள்” என்பது கெட்ட வார்த்தையா?
குழந்தைகளை விளையாட அனுமதிக்கவில்லை என்றால், விளையாட்டின் மூலம் அவர்கள் குழு உணர்வை கற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் எவ்வாறு ஆரோக்கியமான வாழ்வை பெறுவார்கள்? ஒற்றுமையாக இருப்பதன் முக்கியத்துவத்தை விளையாட்டின் மூலமாக அல்லாமல், அவர்கள் வேறு எவ்வாறு உணர்வார்கள்? ஒருவேளை, 'ஒற்றுமையாக இருங்கள்' என்பது இப்போதைய காலகட்டங்களில் நல்ல வார்த்தைகளாக இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், குழு உணர்வு என்பதும் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமைப்படுவது என்பதும் மிக முக்கியமான விஷயங்கள். இவற்றை நாம் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?:
இந்தியாவின் பலம் என்பது கிராமங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் இருக்கிறது என்று நாம் பேசி வருகிறோம். ஆனால் அப்பேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் விளையாட்டு திறனை நாம் ஊக்குவிக்கிறோமா? இது தொடர்பாக நாம் கிராமத்து குழந்தைகளை சென்றடைந்திருக்கிறோமா? அவர்களுக்கு ஆதரவையும் உதவியும் நாம் அளித்திருக்கிறோமா என்ற பல கேள்விகள் நம் முன் எழுகின்றன. நகர் பகுதிகளிலும், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இருக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் வசதிகளை கிராமத்துக் குழந்தைகள் எப்படி பெறப் போகிறார்கள்? என வினவினார்.
விளையாட்டிலும் அரசியல்:
இந்திய அரசு ஃபிட் இந்தியா இயக்கம் மற்றும் சமக்கர சிக்ஷா அபியான் திட்டங்கள் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த திட்டங்களின் மூலம் சில பள்ளிகளே மேற்கண்ட உதவிகளை பெறுகின்றன. கணிசமான பள்ளிகள் இத்திட்டங்கள் மூலம் எந்த உதவியும் பெற முடியாமல் தான் இருக்கின்றன என்பது வேதனையானது. நம் நாட்டின் முக்கியமான விளையாட்டு அமைப்புகள் எல்லாம் அரசியலோடு பிணைந்து இருக்கின்றன. அரசியல்வாதிகளால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. அதிகார விளையாட்டுகளும் ஊழலும்தான் அவற்றில் நடக்கின்றன. அந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தான், யார் விளையாட தேர்வாக வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். பாரபட்சம் இல்லாமல் அங்கு எதுவும் நடப்பதில்லை. இந்த சூழலில் விளையாட்டு வீரர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்? என பேசினார்.
Officials and politicians are controlling the sports industry;
— DMK Updates (@DMK_Updates) December 9, 2022
Women, transgenders, and transmen communities are marginalized in the field of sports because they belong to caste-oppressed communities."
Speech by MP @KanimozhiDMK Avl in Lok Sabha.https://t.co/qVnj5kUWbu #DMK pic.twitter.com/6yyOKtQF2B
ஏகலைவனின் விரலை பெற்ற துரோணாச்சாரியார்:
சக உறுப்பினர் துரோணாச்சாரியர் குறித்து பேசியதை குறிப்பிட்டு பேசிய கனிமொழி, ஏகலைவன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவன். அவன் வில் வித்தையில் சிறந்த நிபுணத்துவம் பெற்று இருந்தான். அர்ஜுனனை விட சிறந்த வில்வித்தை பெற்றிருந்தான். ஆனால் அவன் பழங்குடி இனத்தில் இருந்து வந்த ஒரே காரணத்தால் அவனது கட்டைவிரலை இழக்க நேரிட்டது. மிகச் சிறந்த ஆசிரியர் என போற்றப்படும் துரோணாச்சாரியார் தனது மாணவன் ஏகலைவனிடம் இருந்து அவனது கட்டைவிரலை தட்சணையாக கேட்டார். அன்று தொடங்கிய விளையாட்டில் சாதி அரசியல் இன்னும் முடிந்துவிடவில்லை.
தொடரும் சாதி ரீதியிலான அடக்குமுறை:
சாதி ரீதியான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும், பாலியல் துன்புறுத்தல்களும் விளையாட்டுத் துறையில் இன்றும் நிலவுகிறது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை குழந்தைகள், எத்தனை பெண்கள் ஆர்வம் இருந்தும் விளையாட்டு துறையில் வாய்ப்புகள் பெற்றிருக்கிறார்கள்? கிராமங்களில் ஒருவரை ஒருவர் தொட்டு விடக்கூடாது, ஒருவரது தெருவில் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் நடந்து விடக்கூடாது என்ற தீண்டாமைக் கொடுமைகள் நடக்கும் போது அனைத்து குழந்தைகளும் ஒன்றாக விளையாட எப்படி அனுமதிக்கப்படுவார்கள்? அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
குறிப்பாக குழுவாக சேர்ந்து விளையாட வேண்டிய கபடி, ஹாக்கி போட்டிகளில் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி புறக்கணிக்கப்பட்ட மக்களை நாம் அதாவது அரசாங்கம் எப்படி சென்று சேரப் போகிறோம்? அந்த மக்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்த போகிறது? இதற்காக விளையாட்டுத்துறையில் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என நாங்கள் கோரவில்லை, ஆனால் பாதிக்கப்படும் நபர்களை பாதுகாக்க அரசு ஏதேனும் செய்ய வேண்டும்.
பெண்களை எப்படி பாதுகாக்க போகிறோம்?:
விளையாட்டுத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை நீங்கள் அறிவீர்கள். விளையாட்டுத் துறையில் ஈடுபடும் பெண்கள் அவர்களது குடும்பத்தினரை சம்மதிக்க வைப்பது எளிதல்ல. அதைத் தாண்டி அவர்கள் விளையாட வரும்போது பாலியல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டிய இருப்பதையும் நாம் அறிகிறோம். விளையாட்டு துறைக்கு வரும் இப்படிப்பட்ட பெண்களை நாம் எவ்வாறு பாதுகாக்க போகிறோம்? என, கனொமிழி கேள்வி எழுப்பினார்.