India Canada : தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக கனடா உள்ளது.. இந்தியா சரமாரி குற்றச்சாட்டு
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் கனடா நாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வந்தது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இச்சூழலில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, கடந்த ஜூன் மாதம் கனட நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
இந்திய - கனட நாட்டின் உறவில் விரிசல்:
ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனமும் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை அந்நாடு கனடாவை விட்டு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் கனடாவின் தூதர் ஒருவரை வெளியேற்றியது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனட-இந்தியா இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை நேற்று அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், இந்திய - கனட நாடுகளுக்கிடையே நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து விவரித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "பரஸ்பர தூதர்களின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கனடா அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம்.
இந்தியா பரபர குற்றச்சாட்டு:
கனடாவில் எங்களுடைய தூதர்களின் எண்ணிக்கையை விட இங்கு அவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். கனட தரப்பில் இருந்து குறையும் என்று கருதுகிறேன். இங்கே பாரபட்சமான நிலை இருப்பதாக நான் நினைக்கிறேன். நம் மீது குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுத்துள்ளனர். கனடா அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என தெரிகிறது" என்றார்.
கனட நாட்டவருக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது குறித்து விளக்கம் அளித்த அவர், "கனடாவில் உள்ள தூதரகங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நீங்கள் அறிவீர்கள். இது தூதரகங்களின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்துள்ளது. இதன் காரணமாக, நம் தூதரகங்கள் விசா வழங்க முடியாமல் உள்ளன. நாங்கள் தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம்.
எங்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் பார்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை கனடாவிலிருந்து எந்த குறிப்பிட்ட தகவலையும் நாங்கள் பெறவில்லை. எங்கள் தரப்பில் இருந்து, கனடாவை அடிப்படையாகக் கொண்ட தனிநபர்களின் குற்றச் செயல்கள் பற்றிய குறிப்பிட்ட ஆதாரங்கள் கனடாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றார்.
"தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக கனடா உள்ளது"
கனடா மீது பரபர குற்றச்சாட்டுகளை சுமத்திய அவர், "தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக கனடா உள்ளது. கனட அரசாங்கம் அவ்வாறு செய்யாமல், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நீதியை எதிர்கொள்ள அவர்களை இங்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
நாடு கடத்தல் கோரிக்கை அல்லது அது தொடர்பான உதவியை நாங்கள் கோரினோம். குறைந்த பட்சம் 20-25 நபர்களை நாங்கள் பல ஆண்டுகளாக கோரியுள்ளோம். ஆனால், அவர்கள் எந்த உதவியும் வழங்கவில்லை.
நாங்கள் எங்கள் கடமைகளை மிகவும் தீவிரமாக செய்து வருகிறோம். இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்களுக்கு நாங்கள் நிச்சயமாக அனைத்து பாதுகாப்பையும் வழங்குவோம். கனடாவிலுள்ள எங்களுடைய தூதர்களுக்கு கனட அதிகாரிகள் இதேபோன்ற உணர்வைக் காட்டுவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.