தொடர்ந்து பரபரப்பு... அமளி... நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்..!
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பியூஷ் கோயல் கோரிக்கை விடுக்க, கோயலின் கருத்துகள் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தினார்.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி, நாடாளுமன்ற நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
கூட்டத்தொடருக்கு முன்பே வியூகம் அமைத்த ஆளுங்கட்சி:
நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாகவே, இன்று காலை நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், இரு அவைகளிலும் லண்டனில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பாஜக உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, அனுராக் தாக்கூர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதன்படி, இன்று நாடாளுமன்றம் தொடங்கிய உடனே, ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து குரல் எழுப்பினர்.
ராகுல் காந்தி கருத்தை முன்வைத்து அமளி:
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். "இந்த அவையில் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டனுக்கு சென்று இந்தியாவை அவமதித்தார். இவரின் இந்த அறிக்கையை இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும். நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
மாநிலங்களவையில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "மூத்த தலைவர் ஒருவர் வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதித்தது வெட்கக்கேடானது" என்றார்.
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த காங்கிரஸ், "பிரதமர் நரேந்திர மோடியும் வெளிநாடுகளில் முந்தைய. அரசுகளை அவமானப்படுத்தினார்" என தெரிவித்தது. மக்களவையின் மையத்திற்கு வந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட, மக்களவையும் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்புக்கு பிறகு கூட்டத்தொடர் தொடங்கிய பின்பும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பியூஷ் கோயல் கோரிக்கை விடுக்க, கோயலின் கருத்துகள் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தினார்.
நாள் முழுவதும் ஒத்திவைப்பு:
இந்த விவகாரம் தொடர் அமளிக்கு வழிவகுக்க, நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஜனநாயகத்தை நசுக்கி அழிப்பவர்கள் அதைக் காப்பாற்றுவது போல பேசுகிறார்கள்" என்றார்.