பூட்டிய காருக்குள் இருந்து மீட்கப்பட்ட அண்ணன், தங்கை சடலங்கள்: நடந்தது என்ன?
மும்பை அருகே விளையாடச் சென்ற அண்ணன், தங்கை இருவரும் பூட்டிய காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ளது அண்டாப்ஹில். இங்குள்ள குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் மொகபத் ஷேக். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சஜித்திற்கு 7 வயதும், மகள் முஸ்கானுக்கு 5 வயதும் ஆகிறது.
மாயமான அண்ணன் - தங்கை:
அண்ணன் – தங்கை இருவரும் வழக்கமாக வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினமும் சஜித் மற்றும் முஸ்கான் இருவரும் விளையாடச் சென்றனர். விளையாடச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், மொகபத் சேக் மற்றும் அவரது மனைவி பதற்றம் அடைந்தனர். அவர்கள் இருவரும் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனாலும், அண்ணன் – தங்கை இருவரையும் காணவில்லை.
இதனால், கடும் அச்சத்திற்கு ஆளான பெற்றோர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மாயமான 2 குழந்தைகளின் புகைப்படங்களையும் போலீசார் மும்பையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டனர்.
பூட்டிய காரில் சடலமாக மீட்பு:
மொகபத் சேக் வீட்டைச் சுற்றி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஒரு பழுதடைந்த கார் ஒன்று இருந்தது. அந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, காரின் உள்ளே மாயமான இரண்டு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, காரின் கதவை திறந்து மயங்கிய நிலையில் இருந்த 2 குழந்தைகளையும் மீட்டனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அண்ணன் – தங்கை இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணன் – தங்கை இருவரும் எவ்வாறு காருக்குள் சென்றனர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடச் சென்ற குழந்தைகள இருவரும் காரின் உள்ளே சென்றபிறகு கார் பூட்டிக்கொண்டிருக்கலாம் என்றும், அதைத் திறக்க முடியாமல் உள்ளே தவித்த இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்து இருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அண்ணன் தங்கை இருவரும் பூட்டிய காரில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
மேலும் படிக்க: Crime: உலக்கையாலே அடித்துக் கொலை! மனைவியை கொன்று தற்கொலை செய்த கணவன் - தென்காசியில் சோகம்