பாலியல் தொழில் வழக்கில் பா.ஜ.க. துணைத்தலைவருக்கு பிடிவாரண்ட்.. மேகலாயா அரசியலில் பரபரப்பு..!
பாலியல் தொழில் விடுதி நடத்திய குற்றச்சாட்டில் மேகலாயா பா.ஜ.க.வின் துணைத்தலைவருக்கு ஜாமீனில் வர முடியாத அளவு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இந்தியாவில் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மேகலாயா. இந்த மாநிலத்தின் பா.ஜ.க. துணைத்தலைவராக பொறுப்பு வகிப்பவர் பெர்னார்ட் மாரக். இவருக்கு அந்த மாநிலத்தில் உள்ள துராவில் சொந்தமாக பண்ணைவீடு ஒன்று உள்ளது.
இந்த பண்ணைவீட்டில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பா.ஜ.க.வின் துணைத்தலைவரான பெர்னார்ட் மாரக் பண்ணைவீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அங்கிருந்த 6 மைனர் உள்பட 73 பேரை போலீசார் மீட்டனர். இந்த சோதனை குறித்து அந்த மாநில டி.ஜி.பி. எல்.ஆர்.பிஷ்னோய் கூறும்போது, அந்த பண்ணைவீடுகளில் இருந்து போலீசார் 400 மதுபாட்டில்களையும், 500 பாக்கெட் காண்டம்களையும், போதை மாத்திரைகளையும் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறினார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பெர்னார்ட் மாரக் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பெர்னார்ட் மாரக்கிற்கு பிடிவாரண்ட் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்த மாரக், முதல்வர் சங்மாவின் அரசியல் பழிவாங்கலுக்கு தான் ஆளாகியிருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். பெர்னார்ட் மாரக்கின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்துள்ள அந்த மாநில துணை முதல்வர் பிரஸ்டோன் டைன்சாங், காவல்துறை சுதந்திரமாக செயல்பட மாநில அரசு அனுமதித்துள்ளது என்று கூறினார். மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் சிரமப்பட்டவர்களுக்காக இந்த பண்ணைவீடு செயல்பட்டு வந்ததாகவும், பாலியல் விடுதி நடைபெற்று வந்ததாக கூறுவதை ஏற்கவே முடியாது என்றும் கூறினார்.
மேகலாயாவில் தற்போது முதல்வராக பொறுப்பு வகித்து வரும் சங்கமாவின் மேகலாயா ஜனநாயக கட்சியுடன் கூட்டணியில் அந்த மாநில பா.ஜ.க. உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த மாநில அரசில் 2 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள தேசிய கட்சியின் மாநிலத்தின் முக்கிய தலைவருக்கு பாலியல் விடுதி நடத்திய குற்றத்திற்காக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்