Shashi Tharoor About Ambedkar: இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கர் - காங்கிரஸ் மூத்த தலைவர் புகழாரம்...!
பல தசாப்தங்களுக்கு முன்னரே முற்போக்கு கருத்துக்களை பரப்பியவர் அம்பேத்கர் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டு கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். அதுமட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் என தரப்பு மக்களுக்காகவும் போராடி அவர்களுக்கான உரிமைகளை சட்டத்தின் மூலம் நிலைநாட்டியுள்ளார்.
இந்நிலையில், அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "டாக்டர் பி. ஆர். அம்பேத்கரே இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி ஆவார். அவர் பல தசாப்தங்களுக்கு முன்னரே முற்போக்கு கருத்துக்களை பரப்பி உள்ளார். அது எந்த அளவுக்கு என்றால், இந்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு கூட அது முற்போக்கானதாக இருக்கிறது" என்றார்.
முதல் ஆண் பெண்ணியவாதி :
கோவா பாரம்பரிய விழாவில், சமீபத்தில் தான் எழுதி வெளியாகி உள்ள "Ambedkar: A Life" என்ற புத்தகம் குறித்து பேசும்போது, "அவர் (அம்பேத்கர்) அநேகமாக இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி. 1920, 30, 40களிலேயே அவர் பெண்கள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார். அது இன்று ஒரு ஆண் அரசியல்வாதிக்கு முற்போக்கானதாக கருதப்படுகிறது.
An excellent discussion at @tatalitlive today with @Raghav_Bahl on my biography #AmbedkatALife, published by @AlephBookCo. In his enthusiasm to hold up the book while reading it, Raghav made it look like Dr Ambedkar launched his own bio! pic.twitter.com/DoqbETkE4D
— Shashi Tharoor (@ShashiTharoor) November 12, 2022
கட்டாய திருமணத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என பெண்களை வலியுறுத்தினார். திருமணத்தை தாமதப்படுத்தவும், பிரசவத்தை தாமதப்படுத்தவும் அவர் வலியுறுத்தினார். அவர்கள் தங்கள் கணவருக்கு சமமாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 80-90 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் குறிப்பிடத்தக்க பெண்ணிய சிந்தனை இருந்திருக்கிறது.
அசாதாரண அரசியலமைப்புவாதி:
அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக பார்க்கும் போக்கு உள்ளது. அவர் நாட்டின் முக்கிய தலித் தலைவராக இருக்கிறார். 20 களின் முற்பகுதியில் இருந்து, அவர் ஒரு செல்வாக்கு மிக்க குரலாக இருந்தார். பின்னர், மேலும் மேலும் மேலும் செல்வாக்கு மிக்கவராக ஆனார். அம்பேத்கர் ஒரு அசாதாரண அரசியலமைப்புவாதி. வரைவுக் குழுவின் தலைவராக இருந்துள்ளார். அரசியலமைப்பின் ஒவ்வொரு விதிகளையும் முன்வைத்து அதை பாதுகாத்துள்ளார்" என்றார்.
இந்தியாவின் செல்வாக்கு குறித்து பேசிய அவர், "இது ஒரு ஏழை நாடாகக் கருதப்பட்டது. மேலும், முள்படுக்கையில் படுத்துறங்கும் பிச்சை எடுத்து வாழ்பவரின் வாழ்க்கையை போல இந்தியர்களை கருதினர். தெருக்களில் வித்தைகளை காட்டும் பாம்பாட்டி போல கருதினர். அங்கிருந்து, நடந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் மென்பொருள் புரட்சி ஏற்படுகிறது.
எல்லா கம்ப்யூட்டர்களும் செயலிழந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. கோடிங் மூலம் அந்த பிரச்சனையை போக்க உதவும் இந்தியர்களின் தேவை அதிகரித்தது. அப்போதுதான் இந்தியாவின் மென்பொருள் புரட்சி உண்மையில் வெடித்தது. பிச்சைக்காரர்களாகவும் பாம்பு வைத்து வித்தைகளை காட்டும் நபராக கருதப்பட்டதிலிருந்து இப்போது மென்பொருள் பொறியாளர்களாக உள்ளனர்" என்றார்.