Vijender Singh: காங்கிரஸ் டூ பாஜக.. மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜேந்தர் சிங்?
காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்துள்ளார்.
![Vijender Singh: காங்கிரஸ் டூ பாஜக.. மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜேந்தர் சிங்? Boxer Vijender Singh Switches From Congress To BJP may contest Lok Sabha elections 2024 Vijender Singh: காங்கிரஸ் டூ பாஜக.. மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜேந்தர் சிங்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/03/4b9c0efdf8cb7f69a1840b47275b462a1712138380036729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Vijender Singh: குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இன்று பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, பாஜகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜக பக்கம் சாயும் பிரபலங்கள்:
மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
தேர்தல் நெருங்கும் சூழலில், பலர் கட்சி தாவி வருகின்றனர். குறிப்பாக, பிரபலங்கள், மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் பலர் பாஜக பக்கம் சென்ற வண்ணம் உள்ளனர். சமீபத்தில் கூட, பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், பாஜகவில் இணைந்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆவார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தினார்.
யார் இந்த விஜேந்தர் சிங்?
கடந்த 2006 மற்றும் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும், 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் 2009 உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் பாஜக சார்பாக நடிகை ஹேம மாலினி மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பாக விஜேந்தர் சிங் போட்டியிடுவார் என தகவல் வெளியானது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், ஜாட் சமூகத்தை சேர்ந்த விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்துள்ளதால் ஜாட் சமூக வாக்குகளை பெற பாஜக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் ஜாட் சமூக வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளன. எனவே, பாஜகவை ஆதரித்து இந்த இரண்டு இடங்களில் விஜேந்தர் சிங் பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
பாஜகவில் சேர்ந்த பிறகு பேசிய விஜேந்தர் சிங், "இது எனக்கு தாய் வீடு திரும்புவது போன்றது. நான் 2019 தேர்தலில் போட்டியிட்டேன். வீட்டுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி. விளையாட்டு வீரர்களுக்கு தற்போது நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் மரியாதை கிடைத்து வருவது பாராட்டுக்குரியது.
நாங்கள் போட்டியில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, உதாரணமாக, இங்கிலாந்து மற்றும் துபாய், சில நேரங்களில் விமான நிலையங்களில் சில விஷயங்கள் நடக்கும். ஆனால், பாஜகவும் (நரேந்திர) மோடி அரசும் ஆட்சிக்கு வந்ததால், நாம் எங்கு வேண்டுமானாலும் எளிதாகச் செல்ல முடியும்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)