Bournvita: ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து போர்ன்விட்டா நீக்கம்.. விழுந்தது பேரிடி - காரணம் என்ன?
ஆரோக்கிய பானங்களின் பட்டியலில் போர்ன்விட்டாவை நீக்கி மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அருந்தும் முக்கிய பானமாக இருப்பது போர்ன்விட்டா. சந்தையில் ஹார்லிக்ஸ், பூஸ்ட் என பல பிராண்ட்களின் கடும் போட்டிக்கு மத்தியிலும் பெற்றோர்களின் முதன்மை விருப்பமாக போர்ன்விட்டா இருக்கிறது.
போர்ன்விட்டா அருந்துவதால் உடல்நல குறைபாடா?
இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆரோக்கிய பானங்களின் பட்டியலில் இருந்து போர்ன்விட்டா உள்பட அனைத்து பானங்களையும் நீக்கக் கோரி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கடந்த 10ஆம் தேதி, இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பாணையில், "குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் (CPCR) சட்டம், 2005 பிரிவு (3) இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006இன் கீழ் 'ஆரோக்கிய பானம்' என எதுவும் வரையறுக்கப்படவில்லை. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம், 2005 பிரிவு 14 இன் கீழ் ஆய்வு நடத்திய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதை முடிவு செய்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அதிரடி உத்தரவு:
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில், அனுமதிக்கப்பட்டதை விட போர்ன்விட்டா அதிக சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாதுகாப்புத் தரம் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
நாட்டின் உணவுச் சட்டங்களின்படி, 'ஆரோக்கிய பானம்' என்றால் என்ன என வரையறுக்கப்படவில்லை. ஆரோக்கிய பானம் என குறிப்பிட்டு எதையாவது விற்றால் அது விதிகளை மீறும் செயலாகும்.
சர்ச்சை ஏன்?
இந்த மாத தொடக்கத்தில், பால் சார்ந்த பொருட்களையோ அல்லது தானியம் சார்ந்த பானங்களையோ 'ஆரோக்கிய பானங்கள்' என குறிப்பிடக் கூடாது என இ-காமர்ஸ் போர்டல்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியது.
போர்ன்விட்டாவில் அதிகப்படியான சர்க்கரை, கோகோ திடப்பொருள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள் சேர்க்கப்படுவதாகவும் அதை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலக் கேடுகள் ஏற்படலாம் என்றும் யூடியூபர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: "மோடிக்கு தோசை பிடிக்குமா இல்ல வடை பிடிக்குமாங்கிறது தமிழர்களுக்கு பிரச்னை இல்ல" ராகுல் காந்தி சரமாரி!