"மோடிக்கு தோசை பிடிக்குமா இல்ல வடை பிடிக்குமாங்கிறது தமிழர்களுக்கு பிரச்னை இல்ல" ராகுல் காந்தி சரமாரி!
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ கடுமையாக சாடினார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த நிலையில், கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் குறித்து உருக்கமாக பேசினார்.
தமிழுக்கு இடம் கொடுக்காதது ஏன்?
தனது மூத்த சகோதரர் போன்றவர் மு.க. ஸ்டாலின் என்றும் வேறு எந்த அரசியல் தலைவர்களையும் தான் அண்ணன் என அழைத்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பிரதமர் மோடியை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய அவர், "நரேந்திர மோடி, அதானி மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் தமிழ் மக்கள் பல கேள்விகளை முன்வைக்கிறார்கள். எங்கள் மொழி, வரலாறு, மரபுகள் மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள்? என கேள்வி கேட்கிறார்கள்.
இங்கே வந்து தோசை பிடிக்கும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்று சொல்கிறீர்கள். ஏன் ஒரு மொழி? தமிழ், வங்கம், கன்னடம் அல்லது மணிப்பூரிக்கு ஏன் இடம் கொடுக்கக்கூடாது? என கேள்வி கேட்கிறார்கள்.
"பட்டினி கிடக்கும் தமிழ்நாட்டு விவசாயிகள்"
இங்கு வந்து உங்களுக்கு தோசை பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதே நேரத்தில் தமிழ் விவசாயிகள் பட்டினி கிடக்கிறார்கள். தமிழ் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம் மற்றும் மோசடியான ஜிஎஸ்டி மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்துவிட்டீர்கள்; இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள்.
உங்களுக்கு தோசை பிடிக்கலாம், வடை பிடிக்கலாம். ஆனால் இங்கு அதுவல்ல பிரச்சினை. நீங்கள், தோசை விரும்புகிறீர்களா அல்லது வடை விரும்புகிறீர்களா என்பதை யாரும் கவனிப்பதில்லை. நீங்கள் தமிழ் மொழியை விரும்புகிறீர்களா, தமிழ் வரலாற்றை மதிக்கிறீர்களா.
இந்த தேசத்தின், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைதான் நாங்கள் கவனிக்கிறோம்" என்றார்.
"நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்த பாஜக"
தேர்தல் பத்திர முறைகேடு குறித்து விளக்கிய ராகுல் காந்தி, "இது பற்றி உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். முதலில், அரசியலை சுத்தம் செய்ய வேண்டும் என மோடி கூறுகிறார். பின்னர், புதிய தேர்தல் பத்திர திட்டத்தைக் கொண்டு வருகிறார். பணத்தை யார் நன்கொடையாக வழங்கினாலும் அவர்கள் யார் என சொல்லமாட்டார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் 'சட்டவிரோதம்' என அறிவிக்கிறது. அனைத்து நன்கொடையாளர்களின் விவரங்களையும் வழங்குமாறு உத்தரவிடுகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பாஜகவுக்கு நேரடியாக செல்கிறது. கொடுத்தவர்களின் பெயர்களையும் தேதிகளையும் பார்க்க ஆரம்பித்தோம்.
அப்போதுதான், பணம் கொடுத்த நிறுவனங்கள் சிபிஐ/அமலாக்கத்துறை/வருமான வரித்துறை சோதனைகளை எதிர்கொண்டது தெரிய வருகிறது. சோதனை நடந்த சில நாட்களுக்குப் பிறகு அது பாஜகவுக்கு பணம் கொடுக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு, அதற்கு எதிரான வழக்குகள் முடிக்கப்படுகிறது.
பல சமயங்களில் தொழிலதிபருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது. இது நடந்து சில வாரங்கள் கழித்து அந்த தொழிலதிபர் பாஜகவுக்கு பணம் கொடுக்கிறார். இந்த தொழிலதிபர்கள், பாஜவுக்கு லஞ்சம் கொடுத்திருக்கின்றனர். பாஜகவின் வாஷிங் மிஷின் இப்படிதான் வேலை செய்கிறது. மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்படுவது தெரிய வந்துள்ளது" என்றார்.