“தேர்தல் நேரத்தில்தான் பாஜகவினர் கங்கையில் நீராடுவார்கள்” - மம்தா பானர்ஜி சாடல்
“அவர்கள் மட்டும்தான் இந்து எனவும் மற்றவர்கள் எல்லாம் வானத்தில் இருந்து சாலையில் குதித்தவர்கள் எனவும் பாஜக நினைக்கிறது” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் சமயத்தில்தான் பாஜக கங்கையில் நீராடுகிறது என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
தெற்கு கோவா கட்சி பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, வங்காளதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வன்முறையின் போலி வீடியோக்களை ஆளும் கட்சி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். பின்னர் சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுப்படுத்தத் தவறிய மேற்கு வங்க நிர்வாகத்தையும் விமர்சித்தார்.
தான் இந்துவாக பிறந்தாலும், இஸ்லாமியர்களையோ, கிறிஸ்தவர்களையோ, சீக்கியர்களையோ வெறுக்கத் தன் பெற்றோர் கற்பித்ததில்லை என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி ஒரு மந்தமான ஜமீன்தார் போல நடந்து கொள்கிறது என்றும், ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி “சில அரசியல் கட்சிகள் தங்களை ஜமீன்தார்களாக கருதுவதை இந்தியாவில் பார்த்திருக்கிறோம். அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். மற்றவர்களையும் எதுவும் செய்ய விட மாட்டார்கள்” எனவும் தெரிவித்தார்.
மேலும், “பா.ஜ.க.வை தோற்கடிக்க காங்கிரஸ் வேலை செய்ய நினைத்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கோவாவில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இதுதான் மாற்றுக்கட்சி. நீங்கள் சேர விரும்புகிறீர்கள் என்றால் அதைச் செய்யுங்கள். பாஜக ஒரே ஒரு கதையை மட்டும்தான் கொண்டுள்ளது. அவர்கள் மட்டும்தான் இந்து எனவும் மற்றவர்கள் எல்லாம் வானத்தில் இருந்து சாலையில் குதித்தவர்கள் எனவும் பாஜக நினைக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், “தேர்தல் சமயத்தில்தான் பாஜக கங்கையில் நீராடுகிறது. தேர்தலுக்கு முன்புதான் உத்தராகண்ட் கோயிலுக்கு உள்ளே உட்காருவார்கள். கொரோனாவால் மக்கள் உயிரிழந்தபோது அதே கங்கையில் சடலங்களை தூக்கி எறிவார்கள். அவர்கள் புனித கங்கையை இழிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் நாட்டை பாழாக்கி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைக்க உத்தர பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, கங்கை நதிக்கரையில் புனித நீராடினார்.
வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோவா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸின் ஆட்டத்திற்கு முடிவு கட்டும் வகையில் பல்வேறு கட்சிகள் களமிறங்கவுள்ளன.
தேசிய அரசியலின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை கோவா சட்டமன்ற தேர்தலில் களமிறக்கவுள்ளார். அதற்கான கூட்டணியையும் இணைக்க ஆரம்பித்து விட்டார். கோவா மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரிணாமூல் காங்கிரஸில் இணையத் தொடங்கி விட்டனர். இதனால் அங்கு மம்தாவுக்கு ஆதரவு அலை அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.