Bilkis Bano Case: பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து தாமாகவே விலகிய பெண் நீதிபதி! காரணம் என்ன?
குஜராத் அரசு முன் கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பெலா திரிவேதி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் 11 பேரை குஜராத் அரசு முன் கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பெலா திரிவேதி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பில்கிஸ் பானு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பில்கிஸ் பானு வழக்கில் இருந்து தானாக விலகினார் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த பெண் நீதிபதி பெலா எம் திரிவேதி.
இதையடுத்து இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டது. புதிய அமர்வுக்கு இந்த மனு பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.
"நாங்கள் உறுப்பினராக நீதிபதிகள் அமர்வு முன் இந்த மனுவை பட்டியலிடுங்கள்" என்று நீதிபதி அஜய் ரஸ்தோகி தெரிவித்தார். பெண் நீதிபதி ஏன் இந்த மனுவை விசாரிக்காமல் விலகினார் என்பது குறித்து அந்த அமர்வு எதுவும் காரணம் குறிப்பிடவில்லை.
வழக்கு பின்னணி
கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த இந்த கலவரத்தின்போது டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறொரு பகுதிக்கு சென்றுள்ளார்.
21 வயதான பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை வேறு இருந்தது.
பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்தின் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, மார்ச் 3ஆம் தேதி, ஷபர்வாட் என்னும் கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொடூரமாக சுவற்றில் அடித்துக் கொன்றது அந்த கும்பல்.
கர்ப்பிணியான பில்கிஸ், அவரது அம்மா உள்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 14 பேரை கொடூரமாக கொலை செய்தது அந்த கும்பல்.
குற்றவாளிகள் விடுதலை
இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், நன்னடத்தையின் அடிப்படையில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி முன்கூட்டியே விடுவித்தது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முன்னதாக, ஆயுள் தண்டனையை எதிர்த்து 11 குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்போது, 1992 தண்டனை குறைப்பு விதியின் கீழ் அவரை விடுவிப்பது குறித்து குஜராத் அரசு பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள பாஜக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து 11 குற்றவாளிகளையும் இரண்டே வாரங்களில் விடுதலை செய்தது.
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகளின் விடுதலையை தடுக்கும் 2014 தண்டனை குறைப்பு விதியை குஜராத் அரசு கடைப்பிடித்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.