Crime : நீட் தேர்வில் தேர்ச்சி வேண்டும்.. பயிற்சி மையம் கொடுத்த அழுத்தமா..? ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை..!
ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் மையங்கள் நூற்றுக் கணக்கில் இயங்கி வருகின்றன. ஏராளமான மாணவர்கள் கோட்டா நகரில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் பீகாரை சேர்ந்த அங்குஷ் (16). உஜ்வால் (17) மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தச் பிரணவ் (18) ஆகிய 3 மாணவர்களும் பயிற்சி பெற்று வந்தனர். அங்குஷ் பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கும் (JEE), உஜ்வால் மற்றும் பிரணவ் நீட் (NEET) தேர்வுக்கும் தயாராகி கொண்டிருந்தனர்.
தற்கொலை
இந்த மூன்று பேரும் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில், பிரணவ் என்பவர் விஷம் அருந்தியும், உஜ்வால் மற்றும் பிரணவ் ஆகியோர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனை அறிந்த விடுதி காப்பாளர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தற்கொலை தொடர்பாக எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பயிற்சி மையம் கொடுத்த மனஅழுத்தமே இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மனஅழுத்தமே காரணம்?
கடந்த சில ஆண்டுகளாகவே கோட்டாவில் உள்ள மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமே, நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சிறந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்று பயிற்சி மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு தீவிர அழுத்தம் தரப்படுவதுதான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, நீண்ட வகுப்பு நேரங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் மாணவர்கள் மனஅழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க