Video: ஓடும் ரயிலில் திடீரென பிரிந்த ரயில் பெட்டிகள்.! உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சி..!
Bihar Passenger Train Decoupling : டெல்லியிலிருந்து சென்ற மகத் எக்ஸ்பிரஸ் ரயில் , பீகாரின் பக்சர் மாவட்டத்தில் பெட்டிகள் பிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள பக்சர்-பாட்னா ரயில் பிரிவுக்கு இடையே பயணிகள் ரயில் பெட்டிகளானது பிரிந்து சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரிந்து சென்ற ரயில் பெட்டிகள்:
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள துரிகஞ்ச் - ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புது தில்லி-இஸ்லாம்பூர் மகத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலானது இன்று காலை 11.08 மணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அதில் இருந்த சில பெட்டிகள் பிரிந்து சென்றது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். இந்த சம்பவத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கின்றன.
VIDEO | Magadh Express decoupled on Buxar-DDU-Patna rail section.
— Press Trust of India (@PTI_News) September 8, 2024
(Source: Third Party)#Trainderailment pic.twitter.com/assF7s4lYJ
விசாரணை:
கிழக்கு மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஷர்ஸ்வதி சந்திரா கூறுகையில், டெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்குச் சென்ற மகத் எக்ஸ்பிரஸ் (20802) இணைப்பு உடைந்து ரயிலைப் பிளவுபடுத்தியபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து, துரிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் ஒரு மீட்புக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் என தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
கேள்விக்குள்ளாகும் ரயில்வேதுறை:
இதற்கு முன்பு , கடந்த ஜூலை மாதம், உத்தரப் பிரதேசத்தின் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம் புரண்டது. ஜூலை மாதம் இரவு 11.35 மணிக்கு சண்டிகர் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட ரயில், அசாமில் உள்ள திப்ருகர் நோக்கிச் சென்றது. கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச்-ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் தடம் புரண்டது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தற்போது ரயில் பெட்டிகள் பிரிந்து சென்ற சம்பவத்தையடுத்து, ரயில்வேதுறையின் மீது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read: Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?