Bihar Farmers Protest: ஒரு ரூபாய் கூட விலைபோகாத தக்காளி.. டிராக்டரை ஏற்றி தக்காளிகளை அழித்த விவசாயிகள்..
கிலோவுக்கு ஒரு ரூபாய்கூட விலை போகாத தக்காளி - பயிரிட்டு வாழ்க்கையை நடத்தும் விவசாயி எங்கே போவது ?
பல மாதங்களுக்குப் பிறகு விளைந்த தக்காளிப் பழங்களை, அதைப் பயிரிட்ட விவசாயிகளே டிராக்டரைவிட்டு ஏற்றி அழிக்கும் அவலக் காட்சியைப் பார்த்தாலே மனம் கனக்கச்செய்கிறது. பீகார் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் இந்த வாரம் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. மாவட்டத்தின் கஞ்ச்பசார் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து விவசாயிகள் தொடர்ந்து இவ்வாறு செய்துவருகின்றனர். தக்காளியைப் பயிரிட்டு விளைவிப்பதுவரை ஆகும் செலவுக்கும் அதை மொத்த வியாபாரி வாங்கிக்கொள்ளும் விலைக்கும் எத்தனையோ மடங்கு வித்தியாசம் இருக்கிறது எனக் குமுறுகின்றனர், அந்தப் பகுதி விவசாயிகள்.
மற்ற சில காய்கறிகளாவது 2 ரூபாய் அளவுக்கு விலைபோய்க்கொண்டு இருந்தது; தக்காளி விலையோ கிலோவுக்கு ஒரு ரூபாய்கூட போகவில்லை என்றால் பயிரிட்டு வாழ்க்கையை நடத்தும் விவசாயி எங்கேதான் போவது எனக் குமுறுகிறார்கள், முசாஃபர்நகர் வட்டாரத்தில். எப்படியோ, விலை குறைவாக இருந்தாலும் விளைவித்த தக்காளி யாருக்காவது பயன்படட்டுமே என சந்தைக்குக் கொண்டுசெல்ல முயன்றால், அதற்கு ஆகும் செலவு கிலோவுக்கு நான்கு ரூபாய் முதல் ஐந்து ரூபாய்வரை செலவாகிறதாம். அவர்களால் என்னதான் செய்யமுடியும்?
ஒரு பிக்கா (0.62 ஏக்கர்) நிலத்தில் தக்காளி பயிரிடுவதற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவழித்தேன் என்கிறார், கஞ்ச் பசார் பகுதியின் விவசாயி சாம்பு பிரசாத். “அதில் 5 ஆயிரம் ரூபாய்கூட கைக்கு கிடைக்கவில்லை; ஒரு கிலோ தக்காளியை ஒரு ரூபாய்க்கும் குறைவாக விற்கவேண்டும் எனும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு வருகிறோம். ஆகையால், நாங்கள் பயிரிட்டு உருவாக்கிய தக்காளியை அழிப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியே இல்லை” என்பது பிரசாத் சொல்லும் நியாயம்.
கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியை இவர் அழித்திருக்கிறார் என்கிறார்கள், அப்பகுதிவாசிகள்.
இந்த அளவு நிலைமை மோசமாவதற்குக் காரணமும், கொரோனாதான். ஆம், கொரோனா பொதுமுடக்கத்தால் பல மாநிலங்களைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் முசாபர்நகருக்கு வரமுடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு விற்பதற்காக உள்ளூர் வியாபாரிகள் தக்காளியை மொத்தமாக வாங்கி இருப்புவைப்பது மிகவும் குறைந்துவிட்டது. இல்லை என்றுகூடக் கூறமுடியும் என்கின்றனர் விவசாயிகள். பீகாரின் வடபகுதியில் முசாபர்நகர் கஞ்ச்பசார்தான் மிகப்பெரிய தக்காளிச்சந்தை என்கிறார், மினாப்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் எனும் விவசாயி.
“வழக்கமாக இங்கிருந்து ஒரு நாளுக்கு 20 முதல் 25 டிரக்குகளில் தக்காளியை அனுப்புவோம். ஆனால் அது இப்போது இரண்டோ மூன்றோ எனும் அளவுக்கு குறைந்துவிட்டது.” என விவரங்களை அடுக்குகிறார். ”ஒருபோதும் நான் விளைவித்த பயிர்களை தன் கையாலேயே அழிக்க நேரும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.” என மனம் வெதும்பிப் பேசினார், சஞ்சய்ஷா எனும் விவசாயி. பொதுவாக, 10 பிக்கா நிலத்தில் தக்காளியை விளைவிக்க இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கு சொல்கிறார்கள், விவசாயிகள். கொரோனா என்னென்ன பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்தப்போகிறதோ!?