Bihar Election 2025 Update: பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
பீகாரில் 121 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகாரில், சட்டசபை தேர்தல் இன்று மற்றும் வரும் 11-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், சாதனை அளவாக 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்டம்
பீகாரில், 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். அவர்களில், 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயது நிரம்பியவர்கள். இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் உள்ளனர். அதில் 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவார்கள்.
இதில், முக்கியமான வேட்பாளர்கள் என்று பார்க்கப்போனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியிலும், அவருடைய அண்ணன் தேஜபிரதாப் யாதவ் மஹுவா தொகுதியிலும் துணை முதலமைச்சர் வேட்பாளரான சாம்ராட் சவுத்ரி தாராபூர் தொகுதியிலும், விஜய்குமார் சின்ஹா லக்கிசாரை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் உட்பட, 16 அமைச்சர்கள் முக்கியமான வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
அதோடு, பாஜகவின் மைதிலி தாக்கூர் அலிநகரில் போட்டியிடுகிறார். ஜன் சுராஜ் ஆதரவாளர் துலர்சந்த் யாதவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் அனந்த் சிங் மொகாமா தொகுதியில் போட்டியிடுகின்றார். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் இந்த சட்டமன்றத் தேர்தலுடன் அறிமுகமாகிறது, இதனால் இது மும்முனைப் போட்டியாக அமைகிறது.
இந்த 121 தொகுதிகளுக்கு மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளில் உள்ளன.
முதல்கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவு
இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வரிசையில் நின்றவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பலத்த பாதுகாப்புடன் முதல்கட்ட தேர்தல் நடந்தது. இதில், 1,650 கம்பெனி பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குச் சாவடிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த முதல் கட்ட வாக்குப்பதிவில், பீகார் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், மாலை 5 மணி நிலவரப்படி, பெகுசராய் மாவட்டத்தில் அதிகபட்சமாக 67.32% வாக்குகளும், ஷேக்புரா மாவட்டத்தில் 52.36% வாக்குகளும் பதிவாகியிருந்தன.






















