Bhabanipur bypoll: மசூதியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கிய மம்தா பானர்ஜி!
மேற்கு வங்கத்தில் பவானிப்பூர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அந்த தொகுதியில் உள்ள மசூதிக்குச் சென்று வழிபட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் பவானிப்பூர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அந்த தொகுதியில் உள்ள மசூதிக்குச் சென்று வழிபட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
பவானிப்பூர் தொகுதியில் வரும் செப்டம்பர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் மம்தா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் அவர் 6 மாதங்களுக்குள் தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் பவானிப்பூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதனையடுத்து, தனது பிரச்சாரத்தை அத்தொகுதியில் உள்ள சோலா அனா மசூதியிலிருந்து நேற்று துவங்கினார்.
அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பாஜக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி குறிப்பிடுகையில், பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலுக்கு அவரது தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்ததாகவும், அதுதான் மம்தா பானர்ஜியை மசூதியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்க தள்ளியிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரியங்கா திப்ரேவால் திங்கட்கிழமையான நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மம்தாவிற்கு எதிரான போட்டி அநீதிக்கு எதிரான சண்டை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பவானிப்பூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் எந்த வேட்பாளர்களும் நிறுத்தப்படமாட்டார்கள் என அக்கட்சி கடந்த 8ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையேயான இருமுனைப் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கடந்த தேர்தலின் போது வீல் சேரில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இடைத்தேர்தலில் வென்றே ஆக வேண்டிய சூழலில் உள்ளதால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
#WATCH | West Bengal Chief Minister and TMC candidate from Bhabanipur (by-poll), Mamata Banerjee made a sudden visit to seek blessings at Sola Ana Masjid of the constituency pic.twitter.com/gEJ5E6aehk
— ANI (@ANI) September 13, 2021