இதென்ன பிரமாதம்... ‛அமைச்சர் பிறந்தநாளில் பங்கேற்காதது ஏன்?’ நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி ஆணையர்!
இந்த தகவல் அமைச்சருக்கு சென்றதாகவும், அவர் வருத்தமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பெல்லம்பள்ளி நகராட்சி ஆணையர், நோட்டீஸ் ஒன்றை தயார் செய்துள்ளார்.
ஆட்சியும், அதிகாரமும் இருந்தால், என்னவெல்லாம் செய்யலாம் என்பதை ஆளும் வர்க்கம் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்க, அதிகாரிகள், ஆளும் வர்க்கத்திற்கு என்றும் விசுவாசிகள் என்பதை இது போன்ற சில சம்பவங்கள் தான், வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றன.
தெலங்கானாவில் தெலங்கானா ரஷ்ட்ரிய சமீதி கட்சி ஆட்சி நடத்துவது நாம் அனைவரும் அறிந்தது. அக்கட்சியின் நிறுவனரான கே.சந்திரசேகரராவ் தான், முதல்வராக அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். அவரது மகன் கே.டி.ராமராவ், சிர்சில்லா தொகுதியில் வெற்றி பெற்று, தெலங்கானா அரசின் நகராட்சித்துறை அமைச்சராக பொறுப்பில் உள்ளார்.
முதல்வரின் மகன், முக்கியத்துறையின் அமைச்சர் என்கிற முறையில், கே.டி.ராமராவ்வின் குரல், தெலங்கானாவில் கொஞ்சம் ஓவராகவே கேட்கும். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றாலும், எந்த அளவிற்கு அதிகாரம், தூள் பறக்கிறது என்பதற்கு சமீபத்தில் வந்த அவரது பிறந்தநாளே உதாரணம்.
கடந்த ஜூலை 24ம் தேதி, ராமராவ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. நகராட்சி துறை அமைச்சர் என்பதால், நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அதன் ஒரு தொடர்ச்சியாக, தெலங்கானா பெல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் சம்மந்தப்பட்ட நகராட்சி சார்பில் , அமைச்சர் ராமராவ் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என நகராட்சி ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் சிலர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் அமைச்சருக்கு சென்றதாகவும், அவர் வருத்தமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பெல்லம்பள்ளி நகராட்சி ஆணையர், நோட்டீஸ் ஒன்றை தயார் செய்துள்ளார்.
Telangana | Bellampally Municipal Commissioner issues notice to three employees asking them to explain the reason for not attending birthday celebrations of Municipal minister KTR Rao held on 24th July at Bellampally Government Hospital, warns of disciplinary action pic.twitter.com/csF8WdgNv5
— ANI (@ANI) July 29, 2022
அதில், ‛‛பெல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சி அமைச்சர் கே.டி.ஆர்.ராவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து விளக்குமாறு’’ கூறி, நிகழ்ச்சியில் பங்கேற்காத மூன்று ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமைச்சரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காததற்கு, அதிகாரப்பூர்வ விளக்கம் கேட்டு, அரசு அதிகாரியே நோட்டீஸ் அனுப்பியிருக்கும் சம்பவம், தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.