Lakshadweep Issue: கோடாவால் வந்த கேடு, லாபம் பார்க்கப்படும் லட்சத்தீவுகள்! – என்ன நடந்தது?
கோடா, குஜராத் முதலமைச்சராக நரேந்திரமோடி பதவிவகித்த காலத்தில் அவரது அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர். டிசம்பர் 2020ல் லட்சத்தீவுகள் நிர்வாகியாகப் பதவியேற்றார். பதவியேற்றதும் இவர் பிறப்பித்த ஒழுங்குமுறைகள்தான் இப்போது மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
’நான் லட்சத்தீவிலிருந்து பேசுகிறேன், எங்களது ஆட்சியாளர் எங்கள் தீவுகளை அழித்துக்கொண்டிருக்கிறார். எங்களைக் காப்பாற்றுங்கள்’. அண்மைக்காலமாக யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலிருந்து இப்படியான குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. வங்காள விரிகுடாவுக்கொரு அந்தமான் தீவுகள் போலதான் அரேபியக் கடல்பகுதிக்கு லட்சத்தீவுகள். சுமார் 70,000 பேர் மக்கள்தொகையைக் கொண்ட இவர்களில் 96 சதவிகிதம் பேர் பூர்வகுடியினர்.மலையாளிகள், இஸ்லாமியச் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதி. தங்களது நிர்வாகியான ப்ரஃபூல் கோடா தீவையே அழிக்கப்பார்ப்பதாகப் புகார் சொல்கிறார்கள் இந்த மக்கள்.
கோடாவால் வந்த கேடு!
2020ம் ஆண்டு குடியரசுத்தலைவரின் நேரடி அதிகாரத்தின் கீழ் சட்டப்பேரவையே இல்லாத லட்சத்தீவு நிர்வாகியாக அறிவிக்கப்பட்டவர் ப்ரஃபூல் கோடா.யூனியன் பிரதேசங்களான தாத்ரா , நாகர் ஹவேலி, டாமன் டியூவுக்கும் இவர்தான் நிர்வாகி.யூனியன் பிரதேசங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே நிர்வாகியாக நியமிக்கப்படும் அரசியலமைப்புக்கு விதிவிலக்காக ஐ.ஏ.எஸ் அல்லாத இவரை நிர்வாகியாக நியமித்தது அரசு. கோடா, குஜராத் முதலமைச்சராக நரேந்திரமோடி பதவிவகித்த காலத்தில் அவரது அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர். டிசம்பர் 2020ல் லட்சத்தீவுகள் நிர்வாகியாகப் பதவியேற்றார். பதவியேற்றதும் இவர் பிறப்பித்த ஒழுங்குமுறைகள்தான் இப்போது மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
[/blurb]கொரோனாவே அண்டாத தீவில் தற்போது ஆறாயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் இறந்துள்ளனர். இதற்கு நடுவே இத்தனைச் சட்டமா?நிர்வாகத்தைக் கொடுத்தால் சர்வாதிகாரியாவதா?[/blurb]
என்னென்ன ஒழுங்குமுறைகள்?
லட்சத்தீவு விலங்கள் பாதுகாப்பு ஒழுங்குமுறை 2021ன் கீழ் மாட்டுக்கறி பயன்பாட்டுக்கு முற்றிலுமாகத் தடை, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு கிராமப்பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி, குண்டர்களே இல்லாத ஊரில் குண்டர் தடைச் சட்டம் பிறகு இதெற்கெல்லாம் ஒருபடி மேலே போய் லட்சத்தீவு மேம்பாட்டு அதிகார ஒழுங்குமுறை என கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே அடுக்கடுக்காய், கோடா ஒழுங்குமுறைகளை அடுக்கியதுதான் மக்களைத் தற்போது கொந்தளிக்க வைத்துள்ளது.
’கொரோனாவே அண்டாத தீவில் தற்போது ஆறாயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் இறந்துள்ளனர். இதற்கு நடுவே இத்தனைச் சட்டமா?நிர்வாகத்தைக் கொடுத்தால் சர்வாதிகாரியாவதா?’ என்பதுதான் அங்கே பூர்வகுடிகளின் கேள்வி.
இந்த ஒழுங்குமுறைகள் என்னவெல்லாம் சொல்கிறது?
விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ் அங்கே மாடுகளை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கறி உண்பதற்கும் தடை. மாட்டுக்கறியைப் பதுக்கினால் வாகனங்களில் எடுத்துச்சென்றால் 10 வருடம் சிறை. குறைந்தது 1 லட்சம் அபராதம்.பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மட்டும் இருக்கவேண்டும். இரண்டை மீறினால் வேட்பாளர் தகுதிக்கு வேட்டு.கிட்டத்தட்ட கிரிமினல்களின் எண்ணிக்கை பூஜ்யமென இருக்கும் தீவில் குற்றங்களைத் தடுக்க குண்டர்கள் தடுப்புச் சட்டம்.இதன்படி காரணமே சொல்லாமல் ஒருவரை குண்டர் என அறிவிக்க கோடாவுக்கு அத்தனை அதிகாரமும் கிடைக்கும். மேலும் லட்சத்தீவு மேம்பாட்டு அதிகார ஒழுங்குமுறையின் மேம்பாடு என்கிற பெயரில் நிர்வாகி யாரை வேண்டுமானாலும் அப்புறப்படுத்தலாம். அப்புறப்படுத்தப்படும் தீவுவாசிகள் குடிபெயர்வதற்கான தொகையை அவர்களே செலுத்தவேண்டும்.
தீவுமக்களின் குரல் கடல்கடந்து கேரளாவரை எதிரொலித்துள்ளது.
நகரமயமாக்கலுக்கும் பூர்வகுடிகளுக்குமான இந்த மோதல் இன்று நேற்று அல்ல அமேசான் காடுகள் ஆக்கிரமிப்புத் தொடங்கி இந்திய அரசின் சூழலியல் தாக்க மதீப்பீடு வரை இவை ஆண்டாண்டுகளாகத் தொடர்வதுதான்.ஆனால் பழங்குடிகள் மட்டுமே இருக்கும் ஒரு பிரதேசத்தில் நகரமயமாக்கலின் தேவை என்ன என்பதுதான் இந்த மக்களின் கேள்வி. அதுவும் கொரோனா பேரிடர் கொன்றொழிக்கும்போது கோடாவுக்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏன் இந்த அவசரம் என்கிறார்கள்.
Also Read:தொழிலாளர்கள் போராட்டம்; 5 நாட்கள் விடுமுறை அறிவித்தது ஹூண்டாய்
தீவுமக்களின் குரல் கடல்கடந்து கேரளாவரை எதிரொலித்துள்ளது. கோடாவை நீக்கும்படி குடியரசுத்தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது அம்மாநில அரசு. #CoronaSecondWave ட்ரெண்டிங்குக்கு நடுவே #SaveLakshadweep ஹாஷ்டேக்குகளும் டெரெண்டாகி வருகின்றன. பூர்வகுடிகளின் அல்லலுக்குத் தீர்வளிக்குமா அரசு?