Ayodhya Ram Mandir: 11 நாட்களாக விரதமிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி.. நிகழ்ச்சி நிரல் என்னென்ன..?
Ram Temple : ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்குப் பிறகு, பிற்பகல் 2.15 மணிக்கு குபேர் திலாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி, சிவன் கோயிலில் தரிசனம் செய்து வழிபடுகிறார்.
Ram Temple Ayodhya : ஜனவரி 22ம் தேதியான இன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்தநிலையில், இந்த நிகழ்ச்சிக்காக இன்று அயோத்திக்கு வரும் பிரதமர் மோடி, 4 மணி நேரம் தங்குகிறார் என மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பகிர்ந்துள்ள தகவலின்படி, பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் காலை 10.25 மணிக்கு அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்குகிறார். அதன்பிறகு, விமான நிலையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு ராமர் கோயிலுக்கு சென்றடைவார். அங்கு மதியம் 12:05 மணிக்கு ராம் லல்லா பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர், மதியம் 1 மணிக்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்குப் பிறகு, பிற்பகல் 2.15 மணிக்கு குபேர் திலாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி, சிவன் கோயிலில் தரிசனம் செய்து வழிபடுகிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, விதிமுறைகள் மற்றும் சடங்குகளை கடுமையாக பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ராம்லல்லா பிரான் பிரதிஷ்டை சடங்குகளில் கலந்துகொள்வதற்காக யம விதிகளை பிரதமர் மோடி பின்பற்றினார் என்று கூறப்படுகிறது.
கடந்த 11 நாட்களாக பிரதமர் மோடி, விரதமிருந்து தியானம் செய்ததாகவும், வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவு பொருட்கள் இல்லாத சாத்வீக உணவை மட்டுமே உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி ஒரே ஒரு போர்வையுடன் மட்டுமே தூங்குவதாகவும், தேங்காய் தண்ணீர் மட்டுமே குடிப்பதாவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி வருகைக்கு முன் மற்ற முக்கிய பிரபலங்கள் மற்றும் முக்கியஸ்தர்கள காலை 10.30 மணி வரை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் துவங்கியது. இன்று பிரதமர் மோடி 'பிரான் பிரதிஷ்டை' பூஜை செய்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடி உரை:
அபிஜித் முகூர்த்ததின்போது மதியம் 12:29:03 முதல் 12:30:35 மணி வரை நடைபெறும் ராம் லல்லா சிலையின் ‘பிரான் பிரதிஷ்டை’யில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 84 வினாடிகள் மட்டுமே இந்த சுபமுகூர்த்த நேரம் நீடிக்கும். இந்த நிகழ்ச்சிக்கான கும்பாபிஷேக நேரத்தை வாரணாசியின் அறிஞர் கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் கணித்து தந்துள்ளார்.
9 அம்சங்களாகிய மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசியில் 'இந்திர யோகம், மிருகசிர நட்சத்திரம்' ஆகிய அபிஜித் முஹூர்த்தத்தின் போது இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில், கணேஷ்வர் சாஸ்திரி மற்றும் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த தீட்சித் தலைமையில் 121 வேத பண்டிதர்கள் விழாவை நடத்துகின்றனர்.
விழா முடிந்ததும், பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பொது விழா நடைபெறும் இடத்தில் முக்கிய பிரமுகர்களிடம் பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் கோபால் தாஸ் உரையாற்றுகிறார்.
மேலும், 150 க்கும் மேற்பட்ட பாரம்பரியங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட புனிதர்கள் மற்றும் மதத் தலைவர்கள், பழங்குடியினர், வனவாசிகள், கடலோர, தீவு-வாசிகள் மற்றும் பழங்குடி மரபுகளைச் சேர்ந்த 50 பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, மதியம் 2:10 மணிக்கு, அயோத்தியில் உள்ள 'குபேர் திலா'வை பார்வையிட்ட பிரதமர் மோடி, பின்னர் டெல்லி திரும்புகிறார்.