Ram Mandir Inauguration: கடும் எதிர்ப்பு: ராமர் கோயில் திறப்பு விடுமுறையை திரும்பப்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை!
Ayodhya Ram Mandir Inauguration: மதியம் 2.30 மணி வரை புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
![Ram Mandir Inauguration: கடும் எதிர்ப்பு: ராமர் கோயில் திறப்பு விடுமுறையை திரும்பப்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை! Ayodhya Ram Mandir Inauguration AIIMS Delhi Hospital Remanis Open January 22nd Reverses Decision Ram Mandir Inauguration: கடும் எதிர்ப்பு: ராமர் கோயில் திறப்பு விடுமுறையை திரும்பப்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/837e265e7d14a2aa875866bce1d8ffb01705823695921332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை, கடும் எதிர்ப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.
கோலாகலக் கொண்டாட்டம்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, குடமுழுக்கு விழா தொடர்பான கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் நோக்கில் பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை ( ஜன.22ஆம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்
ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
பிற மாநிலங்கள்
உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மதியம் 2.30 மணி வரை புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. உயிர் காக்கும் மருத்துவப் பணியை கோயில் திறப்புக்காகத் தள்ளிவைக்கலாமா என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை கடும் எதிர்ப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. நோயாளிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)