DGP Warning: போலீஸ்காரங்களே..! மூன்று மாதங்களில் ஃபிட் ஆகுங்க.. இல்லனா வேலை கிடையாது - டி.ஜி.பி. எச்சரிக்கை
பணிபுரிவதற்கு தகுதியற்ற 650 அதிகாரிகளுக்கு விருப்ப விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என அசாம் காவல்துறை தலைவர் ஜி.பி.சிங் தெரிவித்திருந்தார்.
உடல் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகளை பதவியில் இருந்து தூக்க அஸ்ஸாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையில், யார் எல்லாம் பருமனாக இருக்கிறார்களோ அவர்களின் பட்டியலை அஸ்ஸாம் காவல்துறை தயார் செய்தது. அவர்களுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார்.
அஸ்ஸாம் அரசு அதிரடி:
பணிபுரிவதற்கு தகுதியற்ற 650 அதிகாரிகளுக்கு விருப்ப விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என அசாம் காவல்துறை தலைவர் ஜி.பி.சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பணிபுரிவதற்கு தகுதியற்ற காவல்துறை அதிகாரிகளை வெளியேற்றும் வகையில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் உடல் நிறை குறியீட்டெணை (பிஎம்ஐ) அஸ்ஸாம் காவல்துறை பதிவு செய்ய உள்ளது.
உடற்தகுதி பெற காவல்துறை அதிகாரிகளுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு, அவர்களின் பிஎம்ஐ பதிவு செய்யப்படும். இதுகுறித்து அஸ்ஸாம் காவல்துறை தலைவர் ஜி.பி.சிங் பேசுகையில், "ஐபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து அஸ்ஸாம் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மூன்று மாத கால அவகாசம் வழங்க திட்டமிட்டுள்ளோம். பின்னர், அடுத்த பதினைந்து நாட்களில் அவர்களின் பிஎம்ஐ மதிப்பீடு செய்யப்படும்.
தகுதியற்ற அதிகாரிகளுக்கு ஆப்பு:
உடல் பருமனாக அனைத்து அதிகாரிகளுக்கும் (பிஎம்ஐ 30+) உடல் எடையை குறைக்க மேலும் மூன்று மாதங்கள் வழங்கப்படும். அதன் பிறகு, அவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்கப்படும். ஹைப்போ தைராய்டிசம் போன்ற மருத்துவ காரணங்கள் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். ஆகஸ்ட் 16 அன்று, முதல் ஆளாக நானே பிஎம்ஐ சோதனை செய்து கொள்வேன். அஸ்ஸாம் காவல்துறையில் தற்போது 70,000 அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்" என்றார்.
அதிக மது அருந்தும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகள் அடங்கிய பட்டியலை அஸ்ஸாம் காவல்துறை கடந்த வாரம் தயார் செய்தது. முழுமையான ஆய்வுக்கு பிறகு, இவர்களுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அஸ்ஸாம் டிஜிபி தெரிவித்திருந்தார்.
மது அருந்துவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் தனிப்பட்ட அளவில் மட்டும் இன்றி சமூக அளவிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. எனவே, மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இச்சூழலில், அஸ்ஸாம் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகள் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஓட்டுவதால் ஏற்படுகிறது. நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 72 சதவீத விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரால் ஏற்படுகிறது.