Vellore: ₹22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அசாம் பவன்.. இன்று திறந்து வைத்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா!
அசாம் மாநில மக்களுக்காக சலுகை விலையில் தங்குவதற்கு வேலூரில் 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அசாம் பவனை இன்று திறந்து வைத்தார் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
அசாம் மாநில மக்களுக்காக சலுகை விலையில் தங்குவதற்கு வேலூரில் 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அசாம் பவனை இன்று திறந்து வைத்தார் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
அசாம் மாநிலத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காகவும், கல்விக்காகவும் வேலூர் வருகை தரும் அம்மாநில மக்கள் சலுகை விலையில் தங்குவதற்காக வேலூர் சத்துவாச்சாரியில் 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 அடுக்கில் 40 படுக்கை அறைகள், இரண்டு விஐபி அறைகளுடன் கூடிய அசாம் பாவனை இன்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேரில் வந்து திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அசாம் மாநிலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் நம் மாநில மக்கள் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காகவும் மற்றும் கல்லூரிகளில் பயில்வதற்காகவும் வேலூர் வருகின்றனர்.
அவர்களின் நலனுக்காக வேலூரில் தங்கும் மையம் கட்டப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா ,சென்னை, டெல்லி , குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10 தலைநகரங்களில் அசாம் மாநில நோயாளிகள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தங்கும் மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. இது அசாம் மாநில மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்புடன் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அசாம் மாநில நிதியை பயன்படுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற தங்கும் மையங்கள் கட்டப்பட்டு வருவதாக கூறினார். பெங்களூரில் கட்டப்பட்டு வரும் இரண்டு தங்கும் மையங்கள் பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் என்றும் பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ”40, 50 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகிறார்கள். இதுவரை வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தார்கள் தற்போது அவர்களுக்காக தனி இடமாக அசாம் பவனை கட்டியுள்ளோம். அசாமில் போதிய மருத்துவ வசதி இருந்தாலும் கூட சிஎம்சி மருத்துவமனையை நாடி வருகிறார்கள். சாதாரண மனிதர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும் இந்த அசாம் பவனை கட்டியுள்ளோம். இப்போதைக்கு இந்தியாவில் உள்ள 10 மாநில தலைநகரங்களில் அசாம் பவன் கட்டப்பட்டுள்ளது.
வேலூர் தலைநகரமாக இல்லாவிட்டாலும் மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் இங்கு அசாம் பவனை கட்டியுள்ளோம். டெல்லியில் இரண்டு பவனும், கொல்கத்தாவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பெங்களூருவில் கட்டப்பட்டு வருவது பிப்ரவரி மாதத்தில் முடிந்து திறக்கப்படும். இது முழுக்க முழுக்க அசாம் மாநில நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் தமிழகத்தில் பிஜேபி உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது குறித்து கேட்டதற்கு அரசியல் குறித்த கேள்விக்கு தற்போது பதில் அளிக்கவில்லை” என கூறினார்.