காலை 11 மணி நிலவரம் : மே.வ., 24.61, அசாம் 24.48 சதவீத வாக்குகள் பதிவு
முதற்கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் மேற்குவங்கத்தில் காலை 11 மணியளவில் 24.61 சதவீதமும், அசாமில் 24.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலத்தின் 294 தொகுதிகளில் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கும், 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு விதிகளுடன் நடைபெற்று வரும் இந்த தேர்தலில், காலை 9 மணியளவில் மேற்கு வங்கத்தில் 7 சதவீத வாக்குகளும், அசாம் மாநிலத்தில் 6.46 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது. தற்போது, 11 மணி நேர நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் 24.61 சதவீதம் வாக்குகளும், அசாமில் 24.48 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மேலும், மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக அதிகாலை நேரத்தில் பகவன்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சத்சத்மல் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வன்முறையாளர்களுடன் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், காவல் நிலைய அலுவலர் தீபக்குமார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர் என இருவர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.