டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஸ்கெட்ச் போடும் ED.. தேசிய அரசியலில் பரபரப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
![டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஸ்கெட்ச் போடும் ED.. தேசிய அரசியலில் பரபரப்பு Arvind Kejriwal Summoned By Enforcement Directorate ED On Thursday In Liquor Policy Case know more details here டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஸ்கெட்ச் போடும் ED.. தேசிய அரசியலில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/c14ec6dc3a9ff2b076392a380f61c37e1702907421625729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு:
குறிப்பாக, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, ஆம் ஆத்மி கட்சியை மிக பெரிய நெருக்கடியில் தள்ளியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்த மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்துள்ளது.
சிசோடியாவை தொடர்ந்து, அதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக நவம்பர் 2ஆம் தேதி நேரில் அஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தால் அவரால் ஆஜராக முடியவில்லை.
கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
இதுதொடர்பாக அவர் அமலாக்கத்துறைக்கும் கடிதம் எழுதியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்ட விரோதம் என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கெஜ்ரிவால் எதிர்வினையாற்றினார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. வரும் 21ஆம் தேதி வந்து ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு தனி நபர், மூன்று முறை வரை சம்மனை தவிர்க்கலாம். அதற்கு பிறகும், சம்மனுக்கு ஆஜராகவில்லை என்றால், ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம், கெஜ்ரிவாலிடம் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியிருந்த கெஜ்ரிவால், "சிபிஐ என்னிடம் 56 கேள்விகளைக் கேட்டது. ஆனால், அனைத்தும் தவறான கேள்விகள். அவர்களிடம் எதுவும் இல்லை என எனக்கு இதில் தெரிந்துவிட்டது. ஒரு ஆதாரமும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
மாநில முதலமைச்சரை கைது செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. பல நடைமுறைகள் உள்ளன. மாநிலத்தின் நிர்வாகமே முடங்க வாய்ப்புள்ளது. அப்படி கைது செய்யப்பட்டால், தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா? இல்லை அந்த பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)